சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 14 வயது சிறுமிகளுக்கு நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2026 3:36PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 14 வயது சிறுமிகளுக்கு நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், கடமை மாளிகையில் இருந்து காணொளி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ், சப்தர்ஜங் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சந்தீப் பன்சால் மற்றும் புதுதில்லி எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனை, ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம், இந்தியாவின் 'மகளிர் சக்தி'யை மேம்படுத்துவதிலும், தாய்மார்கள் மற்றும் மகள்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று கூறினார். "குடும்பத்தில் தாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த இல்லம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் என்பதை அனைவரும் அறிவோம். தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், குடும்பம் எவ்வித நெருக்கடியான நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இந்த உணர்வுடன், பெண்களின் ஆரோக்கியத்திற்காக மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது," என்று அவர் கூறினார்.
மகளிரின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, பெரிய அளவிலான கழிப்பறை கட்டுமானம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்குதல் மற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பை உறுதி செய்யும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை வழங்குவதற்காக, கர்ப்பிணித் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும் பாதுகாப்பான தாய்மைத் திட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இத்தகைய முயற்சிகள், பெண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மீதான அக்கறை, கண்ணியம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் மாற்றத்தை பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233906®=3&lang=1
***
TV/SV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233954)
வருகையாளர் எண்ணிக்கை : 90