மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பள்ளி மாணவர்களின், ஒரு கோடி கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் தனித்துவ அடையாள ஆணையத்தால் நிறைவு செய்யப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2026 2:43PM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - யுஐடிஏஐ) தனது தொடர்ச்சியான நடவடிக்கைகளின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, நாடு முழுவதும் 83000 பள்ளிகளில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை நிறைவு செய்து மைல்கல் சாதனையைக் கடந்துள்ளது.

ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் கூடுதல் (UDISE+) செயலியுடன் வெற்றிகரமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குப் பிறகு, பள்ளிக் குழந்தைகளுக்கான இந்த சிறப்பு பயோமெட்ரிக் புதுப்பிப்பு இயக்கத்தை யுஐடிஏஐ செப்டம்பர் 2025-ல் தொடங்கியது.

யுஐடிஏஐ-வின் இந்த முயற்சி குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு யுஐடிஏஐ-வின் தலைமை நிர்வாக அதிகாரி திரு புவனேஷ் குமார் கடிதம் எழுதி, ஆதரவைக் கோரினார். நாட்டின் எட்டு இடங்களில் உள்ள யுஐடிஏஐ பிராந்திய அலுவலகங்கள், இந்த மிகப்பெரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டன. நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் உள்ளடக்கப்படும் வரை இந்த இயக்கம் தொடர்ந்து செயல்படும். இந்த முயற்சியால் ஏற்கனவே 83,000 பள்ளிகளில் உள்ள 1 கோடி குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும் பலர் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின், புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஆதார் பதிவு செய்யப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் கைரேகைகள், கருவிழி பயோமெட்ரிக்ஸ் ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் அவை அந்த வயதில் முதிர்ச்சியடையாது.

எனவே, 5 முதல் 15 வயதின்போது, பயோமெட்ரிக் பதிவு செயல்முறையைப் பின்பற்றி ஆதாரில் கைரேகைகள், கருவிழித் தகவல்களைப் பதிவு செய்வது குழந்தைகளுக்கு அவசியமான தேவையாகும். ஆதாரில் இது இல்லாது இருந்தால் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.

7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கட்மாய பயோமெட்ரிக் பதிவுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை 2025 அக்டோபர் 1 முதல் ஒரு வருட காலத்திற்கு யுஐடிஏஐ தள்ளுபடி செய்துள்ளது. அவர்களுக்கு இது தொடர்ந்து இலவசமாகவே உள்ளது.

பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்களைத் தவிர, ஆதார் மையங்களிலும் குழந்தைகள் இந்தப் பணியை மேற்கொள்ளலாம். இந்த மையங்கள் மூலம் இதே காலகட்டத்தில் சுமார் 1.3 கோடி பயோமெட்ரிக் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

***

(Release ID: 2225104)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2225222) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Malayalam