ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க இந்திய ரயில்வேயின் ‘ஏஐ தொழில்நுட்பம் நாடாளுமன்றத்தில் தகவல்

प्रविष्टि तिथि: 04 FEB 2026 4:56PM by PIB Chennai

ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் ‘ஊடுருவல் கண்டறியும் அமைப்பு’ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

இந்த ஐடிஎஸ் தொழில்நுட்பமானது, விநியோகிக்கப்பட்ட ஒலி உணரிகள் மூலம் தண்டவாளத்தின் அருகே யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உடனடியாக லோகோ பைலட்டுகள், ரயில் நிலைய மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யும். தற்போது வடகிழக்கு எல்லை ரயில்வேயில் 141 கி.மீ தூரத்திற்குச் செயல்பாட்டில் உள்ள இந்த வசதி, தெற்கு ரயில்வே (55.85 கி.மீ) உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்களின் வேகத்தைக் குறைத்தல், யானைகள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல கீழ்ப்பாலங்கள் மற்றும் சரிவுப் பாதைகளை அமைத்தல், தண்டவாளத்தின் அருகே யானைகள் வருவதைத் தவிர்க்க வேலிகள் மற்றும் தேனீக்களின் சத்தம் எழுப்பும் கருவிகளை (Honey Bee buzzers) நிறுவுதல், இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் LED விளக்குகள் மற்றும் தெர்மல் கேமராக்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 16 யானை விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், வனத்துறையுடன் இணைந்து இத்தகைய விபத்துகளை முற்றிலுமாகத் தவிர்க்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2223196)

TV/VK/RK


(रिलीज़ आईडी: 2223513) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada