பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற பராக்கிரம தின நிகழ்ச்சியில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை

பராக்கிரம தினத்தின் உத்வேகம், இந்தியாவின் வளர்ச்சிக்கான உறுதியைத் தொடர்ந்து வலுப்படுத்தும்: பிரதமர்

प्रविष्टि तिथि: 23 JAN 2026 6:07PM by PIB Chennai

பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நேதாஜியின் வீரமும் துணிச்சலும் நம்மை ஊக்குவிக்கிறது என்றும், அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளில், பராக்கிரம தினம்  தேச உணர்வின் ஒருங்கிணைந்த பண்டிகையாக மாறியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

இந்த வருடம் பராக்கிரம தினத்தின் முக்கிய கொண்டாட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் நடைபெறுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, வீரம், தியாகம் மற்றும் துணிச்சல் நிறைந்த அந்தமான் மற்றும் நிக்கோபாரின் வரலாறு, செல்லுலார் சிறையில் வீர் சாவர்க்கர் போன்ற தேசபக்தர்களின் கதைகள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடனான அதன் தொடர்பு ஆகியவை இந்த கொண்டாட்டத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன என்று கூறினார். பல புரட்சியாளர்கள் இங்கு சித்திரவதை செய்யப்பட்டு, ஏராளமான போராளிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தபோதும், சுதந்திரப் போராட்டத்தின் தாகம் மேலும் வலுவடைந்தது என்று அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுதந்திரப் போராட்டத்தின் ஒரு மகத்தான தலைவராக மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாளராகவும் திகழ்ந்தார் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இந்தியாவின் பண்டைய உணர்வில் வேரூன்றிய, நவீன வடிவத்திலான  ஒரு தேசத்தை உருவாக்க அவர் கனவு கண்டார். இன்றைய தலைமுறையினருக்கு நேதாஜியின் தொலைநோக்குப் பார்வையை அறிமுகப்படுத்துவது நமது கடமை என்று கூறிய திரு மோடி, இந்தப் பொறுப்பை தனது அரசு நிறைவேற்றுவதற்கு  மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒரு பலவீனமான நாடு தனது இலக்குகளை அடைவது கடினம் என்றும், அதனால்தான் நேதாஜி, எப்போதும் வலிமையான தேசத்தைக் கட்டமைக்க விரும்பினார் என்றும் திரு. மோடி கூறினார். 21-ம் நூற்றாண்டில், இந்தியாவும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் உறுதியான தேசமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரின் போது, நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தியவர்களின் எல்லைக்குள் நுழைந்து அவர்களை அழித்ததன் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதிகாரத்தை எவ்வாறு உருவாக்குவது, அதை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இன்று இந்தியாவுக்குத் தெரியும் என்று திரு மோடி தெரிவித்தார். வலுவான இந்தியா என்ற நேதாஜியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பாதுகாப்புத் துறையில்  தன்னிறைவு ஏற்பட நாடு பாடுபடுகிறது என்று அவர் கூறினார். இந்தியா தனது ஆயுதப் படைகளை தன்னிறைவு சக்தியுடன் நவீனமயமாக்கி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்  அட்மிரல் (ஓய்வு) டி.கே. ஜோஷி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) அறக்கட்டளையின் தலைவர் பிரிகேடியர் (ஓய்வு) ஆர்.எஸ். சிகாரா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவரும்,  ஐஎன்ஏ வீரருமான லெப்டினன்ட் ஆர். மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217768&reg=3&lang=2

(Release ID: 2217768)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2217922) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Odia , Malayalam