கலாசாரத்துறை அமைச்சகம்
233 ஆண்டுகள் பழமையான வால்மீகி ராமாயண கையெழுத்துப் பிரதி ராம கதை அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பு
प्रविष्टि तिथि:
20 JAN 2026 5:53PM by PIB Chennai
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வாக, மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீநிவாச வரகேடி, 233 ஆண்டுகள் பழமையான 'வால்மீகி ராமாயணம்' சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதியை, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் செயற்குழுத் தலைவர் திரு. நிருபேந்திர மிஸ்ராவிடம் வழங்கினார்.
வால்மீகி இயற்றிய இந்த மூல நூல், மகேஸ்வர தீர்த்தரின் செவ்வியல் உரையுடன் தேவநாகரி எழுத்து வடிவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இது விக்ரம் சகாப்தம் 1849-ஆம் ஆண்டைச் (கி.பி. 1792) சேர்ந்தது. வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரதியில் பால காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் ஆகிய ஐந்து முக்கிய காண்டங்கள் அடங்கியுள்ளன.
முன்னதாக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் கடனாக வழங்கப்பட்டிருந்த இந்தக் கையெழுத்துப் பிரதி, தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்வதேச ராம கதை அருங்காட்சியகத்திற்கு நிரந்தரமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. ராமாயண பாரம்பரியத்திற்கான உலகளாவிய மையமாக இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பேராசிரியர் வரகேடி, "புனித நகரான அயோத்தியில் உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் வால்மீகி ராமாயணத்தின் ஆழ்ந்த ஞானத்தை அணுகுவதை இது உறுதி செய்யும்" என்று குறிப்பிட்டார். திரு. நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்த அரிய கையெழுத்துப் பிரதி அயோத்தி அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது ராம பக்தர்கள் மற்றும் அயோத்தி கோயில் வளாகத்திற்கு ஒரு முக்கிய நிகழ்வாகும்" என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216500®=3&lang=1
வெளியீட்டு எண்: 2216500
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2216635)
आगंतुक पटल : 7