மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடல் உணவு ஏற்றுமதி மேம்பாடு குறித்த மாநாடு 2026 ஜனவரி 21 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
20 JAN 2026 11:16AM by PIB Chennai
கடல் உணவு ஏற்றுமதி மேம்பாடு குறித்து தூதர்கள் மற்றும் துணைத் தூதர்களுடனான வட்டமேஜை மாநாட்டிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் 2026 ஜனவரி 21 அன்று நடைபெறவுள்ள இம்மாநாடு இருதரப்பு வர்த்தகம், சர்வதேச சந்தை இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமை தாங்குகிறார். இணையமைச்சர்கள் திரு ஜார்ஜ் குரியன், பேராசிரியர் திரு எஸ் பி சிங் பாகல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாட்டில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஓசியானியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த 83 கூட்டாண்மை நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத்தூதர்கள் பங்கேற்க உள்ளனர். வெளியுறவு அமைச்சகம், மீன்வளத்துறை, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஏற்றுமதி ஆய்வுக் குழுமம், வர்த்தகத்துறை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம், உணவுப்பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்புப் போன்ற சர்வதேச முகமைகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
மதிப்புக் கூட்டப்பட்ட கடல் உணவு வர்த்தகம் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல், முதலீடு, கூட்டாண்மை தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் கட்டமைப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மீன் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா தற்போது 6-வது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. 2024-25-ம் ஆண்டு 16.98 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு ரூ.62,408 கோடி மதிப்பிலான கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது இந்தியாவின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216344®=3&lang=1
***
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2216397)
आगंतुक पटल : 14