குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், உத்தராகண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) பி சி கந்தூரியுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
17 JAN 2026 4:04PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று உத்தராகண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) பி சி கந்தூரியை டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். திட்டமிடப்படாத இந்தச் சந்திப்பு, இரு தலைவர்களுக்கும் இடையேயான அன்பான தனிப்பட்ட நட்புறவையும், பல தசாப்த கால பொது வாழ்க்கையில் பரஸ்பரம் மரியாதை, தோழமையுடன் கூடிய நீண்டகால தொடர்பையும் பிரதிபலிப்பதாக இருந்தது.
இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கந்தூரி, முப்பது ஆண்டுகளுக்கும் கூடுதலாக நாட்டிற்குச் சிறப்பாக சேவை ஆற்றினார். அவரது சிறப்பான சேவைக்காக, அவருக்கு அதி விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டது. ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் பொது வாழ்வில் ஈடுபட்டு, உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னேற்றம், நிர்வாக நடைமுறைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். இரண்டு முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையின் கீழ், மத்திய அரசில் இணையமைச்சராகவும், பின்னர் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தில் கேபினட் அமைச்சர் உட்பட முக்கியப் பதவிகளையும் வகித்தார். அவரது பதவிக்காலத்தில், நாட்டின் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தும் வகையில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
மக்களவை உறுப்பினர்களாக பணியாற்றியபோது இருவரும் தங்களுக்கு இடையே இருந்த நட்புறவை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், நாடாளுமன்றத்தில் ஒன்றாகப் பணியாற்றிய இனிமையான தருணங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதைக் கருத்தில் கொள்ளுமாறு, அப்போதைய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அமைச்சராக இருந்த மேஜர் ஜெனரல் கந்தூரியிடம் தான் விடுத்த கோரிக்கையை, அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டதை குடியரசு துணைத் தலைவர் அப்போது நினைவு கூர்ந்தார்.
மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு, கோயம்புத்தூர் நகரம் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக உருவெடுப்பதற்கு பங்களித்துள்ளது என்றும், ஒட்டுமொத்த பிராந்திய வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது ஆதரவிற்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் குடியரசு துணைத் தலைவர், மேஜர் ஜெனரல் கந்தூரிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215605®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2215669)
आगंतुक पटल : 5