பாதுகாப்பு அமைச்சகம்
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு சமநிலையான ராணுவ எதிர்வினையாக இருந்தது, இந்தியாவின் துணிச்சல், வலிமை, கட்டுப்பாடு மற்றும் தேசிய உணர்வை பறைசாற்றியது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 7:35PM by PIB Chennai
"உலகளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஒரு சமநிலையான ராணுவ நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் உருவானது. மேலும் இது இந்தியாவின் துணிச்சல், வலிமை, கட்டுப்பாடு மற்றும் தேசிய உணர்வின் அடையாளமாக வரலாற்றில் நினைவுகூரப்படும்" என்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 78-வது ராணுவ தின கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். வீரர்களின் மகத்தான துணிச்சல், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் போர்க்களத்தின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு அவர்கள் தகவமைத்துக் கொண்ட விதத்தைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு மனிதாபிமான விழுமியங்களுக்கு உரிய மரியாதையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும், வேகத்தையும் பயங்கரவாதிகள் எதிர்பார்த்திருக்க முடியாது என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். "நிலைமை கடினமாகத்தான் இருந்தது, ஆனால் நமது வீரர்கள் இதுவரை இல்லாத கட்டுப்பாடு, ஒற்றுமை மற்றும் பொறுமையை வெளிப்படுத்தினர்" என்று அவர் கூறினார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும், பயங்கரவாத சித்தாந்தம் ஒழிக்கப்படும் வரை இந்தியாவின் அமைதிக்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
"அனைத்து நிறுவப்பட்ட கருத்துக்களும் சவால் செய்யப்படும் ஒரு காலகட்டத்தில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதும், அவற்றின் நவீனமயமாக்கல் மற்றும் தன்னிறைவை உறுதி செய்வதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது. தேச பாதுகாப்பையும் நமது வீரர்களின் திறன்களையும் வலுப்படுத்துவதில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி இன்று ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. 2014-ம் ஆண்டில் ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது சுமார் ரூ.24,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய ராணுவம் அபாரமான துணிச்சல், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இணையற்ற தியாகத்தின் கலங்கரை விளக்கமாகவும், பன்முகத்தன்மையில் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். நாடு முழுவதும் உள்ள வீரர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்டவர்களாக இருந்தபோதும், இளம் வயதிலேயே ஒரு பொதுவான குறிக்கோளுக்காக ஒன்றுபடுகிறார்கள் என்று கூறினார்.
இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர்ந்து தேச நிர்மாணத்தில் பங்களிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதே வேளையில், ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவது, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவது, ஆயுதப் படைகளின் தியாகங்கள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வது, மக்களின் கடமை என்றும் திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215057®=3&lang=1
***
TV/BR/RK
(रिलीज़ आईडी: 2215185)
आगंतुक पटल : 5