இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் ஆரோக்கியமே வலுவான தலைமைத்துவத்துக்கு அடித்தளம்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
प्रविष्टि तिथि:
11 JAN 2026 4:31PM by PIB Chennai
உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் உடற்பயிற்சி இயக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் (சண்டேஸ் ஆன் சைக்கிள்), நிகழ்வின் 56-வது வார நகழ்வு புதுதில்லியில் இன்று (11.01.2026) நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்த் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பொது வாழ்வில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கான தேசிய தளமான வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ல் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்த இளம் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, ஆரோக்கியமான உடல்தான் வலுவான தலைமைத்துவத்தின் அடித்தளம் என்றார். மிதிவண்டி ஓட்டுதல் நமக்கு சக்திவாய்ந்த தலைமைத்துவ பண்பைக் கற்றுக்கொடுக்கிறது என அவர் கூறினார். எப்போது வேகமாக மிதிவண்டி ஓட்ட வேண்டும், எப்போது மெதுவாகச் செல்ல வேண்டும், சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்ற வாழ்க்கைப் பாடங்களை இது நமக்குச் சொல்லித் தருகிறது என்று அவர் தெரிவித்தார்.
"ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல்" என்ற முயற்சியைப் பாராட்டிய பேட்மிண்டன் வீரர் கோபிசந்த், உடற்பயிற்சியை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றும் இந்த முயற்சி ஊக்கமளிக்கிறது என்று கூறினார்.
உடல் திறன் இந்தியா போன்ற சமூக உடற்பயிற்சி இயக்கங்களை செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், உடற்பயிற்சிகள் என்பது வலுவான உடலைக் உருவாக்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மனதையும் உருவாக்கும் என்றார். இது போன்ற சமூக நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படுவது சிறப்பு வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற உற்சாகமான ஜூம்பா அமர்வு, அமைதியான யோகா பயிற்சிகள், விளையாட்டு வீரர்களின் கயிறு தாண்டுதல் நிகழ்ச்சிகள் ஆகியவை பலத்த வரவேற்பைப் பெற்றன.
தில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் 1500 இடங்களில் இன்று இந்த மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213417®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2213470)
आगंतुक पटल : 16