பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ ராய்ப்பூரில் உள்ள சத்ய சாய் சஞ்சீவனி சிறுவர் இதய மருத்துவமனையில், இதய நோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து குணமடைந்த குழந்தைகளுடன் பிரதமர் மேற்கொண்ட உரையாடலின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2025 6:52PM by PIB Chennai

பிரதமர்: இதயப்பூர்வமாக என்னிடம் பேச விரும்புவது யார்?

சிறுவன் (பயனாளிக் குழந்தை): நான் ஒரு ஹாக்கி சாம்பியன். ஹாக்கியில் 5 பதக்கங்களை வென்றுள்ளேன். எனது பள்ளியில் நடந்த மருத்துவப் பரிசோதனையின் போது, எனது இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் இங்கு வந்தேன், அறுவை சிகிச்சை செய்துகொண்டேன், இப்போது என்னால் மீண்டும் ஹாக்கி விளையாட முடிகிறது.

பிரதமர்: உனக்கு எப்போது அறுவை சிகிச்சை நடந்தது?

சிறுவன்: ஆறு மாதங்களுக்கு முன்பு.

பிரதமர்: இதற்கு முன்பும் நீ விளையாடுவதுண்டா?

சிறுவன்: ஆம்.

பிரதமர்: இப்பொழுதும் நீ விளையாடுகிறாயா?

சிறுவன்: ஆம்.

பிரதமர்: எதிர்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?

சிறுவன்: நான் ஒரு மருத்துவர் ஆக விரும்புகிறேன்.

பிரதமர்: மருத்துவர் ஆன பிறகு நீ என்ன செய்வாய்?

சிறுவன் (பயனாளிக் குழந்தை): நான் எல்லா குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பேன்.

பிரதமர்: குழந்தைகளுக்கு மட்டும்தானா?

சிறுவன்: எல்லாருக்கும்தான்.

பிரதமர்: நீ மருத்துவர் ஆகும்போது, எனக்கு வயதாகி இருக்கும் — நீ எனக்கும் சிகிச்சை அளிப்பாயா?

சிறுவன்: ஆம், நிச்சயம் அளிப்பேன்.

பிரதமர்: சத்தியமா?

சிறுவன்: ஆம், சத்தியம்.

பிரதமர்: நல்லது.

சிறுவன்: நான் இவரை (பிரதமரை) எப்போதாவது சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இன்று நான் அவரை முதல்முறையாக சந்தித்தேன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறுவன் (மற்றொரு பயனாளி): எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் வளர்ந்த பிறகு, மருத்துவராகி அனைவருக்கும் சிகிச்சை அளிக்க விரும்புகிறேன்.

பிரதமர்: அறுவை சிகிச்சையின் போது நீ அழுதாயா?

சிறுவன்: இல்லை, நான் அழவில்லை.

பிரதமர்: ஆனால் நீ நிறைய அழுததாக மருத்துவர் கூறினாரே.

சிறுவன்: மருத்துவர் எப்போது அப்படிச் சொன்னார்? அவர் அப்படிச் சொல்லவில்லையே.

பிரதமர்: இல்லையா?

சிறுவன் (பயனாளிக் குழந்தை): நான் உங்களுக்காக ஒரு கவிதையை வாசிக்க விரும்புகிறேன்.

பிரதமர்: சரி, தாராளமாகச் சொல்.

சிறுவன்: "உன் இலக்கைத் தாண்டிச் சென்று புதிய இலக்கைத் தேடு, உனக்கு ஆறு கிடைத்தால், கடலைத் தேடு. ஒவ்வொரு கண்ணாடியும் கல்லடி பட்டால் உடைந்துவிடும், கல்லையே உடைக்கக்கூடிய கண்ணாடியைத் தேடு. உன் பிரார்த்தனைகளால் என்ன பயன்? பல நூற்றாண்டுகள் வீணாகக் கடந்துவிட்டன, உன் வாழ்க்கையையே மாற்றக்கூடிய வகையில் நீ பிரார்த்தனை செய்."

பிரதமர்: அற்புதம்! மிக நன்று!

சிறுவன்: எனக்கு 14 மாதக் குழந்தையாக இருந்தபோது, 2014-இல் அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

பிரதமர்: நீ வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்கிறாயா? உனக்கு அறுவை சிகிச்சை முடிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன, அல்லவா?

சிறுவன்: ஆம், ஐயா.

பிரதமர்: இப்போது எல்லாம் நலமாக இருக்கிறதா?

சிறுவன்: எந்தப் பிரச்சனையும் இல்லை, ஐயா.

பிரதமர்: நீ விளையாடுகிறாயா?

சிறுவன்: ஆம், ஐயா.

பிரதமர்: கிரிக்கெட்டா?

சிறுவன் (பயனாளிக் குழந்தை): ஆம், ஐயா.

சிறுவன்: நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன், நான் ஒரு 2 நிமிடங்கள் உங்களிடம் வரலாமா?

பிரதமர்: அருகில் வா, தாராளமாக.

பிரதமர்: நீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தாய்? நீ மருந்துகள் உட்கொண்டிருக்க வேண்டும், ஊசி போட்டிருக்க வேண்டும் — அது எப்படி இருந்தது?

சிறுவன்: ஐயா, எனக்கு ஊசி போடுவதென்றால் பயமே கிடையாது, அதனால் எனது அறுவை சிகிச்சை மிகவும் சுமூகமாக நடந்தது, நான் பயப்படவில்லை.

பிரதமர்: அது மிகச்சிறப்பு. உன்னைப் பற்றி உன் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிறுவன்: நான் படிப்பில் கெட்டிக்காரன் என்று என் ஆசிரியர்கள் சொல்கிறார்கள், ஆனால் எனக்குப் பேசும்போது கொஞ்சம் திக்கும்.

பிரதமர்: அப்படியா. ஆனால் நீ உண்மையைச் சொல்வது நல்லது — நேர்மையாக இருப்பது எப்போதும் உதவும்.

சிறுவன்: நான் 7-ஆம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை...

பிரதமர்: நீ 7-ஆம் வகுப்பு படிக்கிறாயா, கண்ணா?

சிறுவன்: ஆம், ஐயா.

பிரதமர்: நீ சரியாகச் சாப்பிடுகிறாயா?

சிறுவன்: ஆம் ஐயா, சாப்பிடுகிறேன்.

பிரதமர்: அல்லது உன் 'ஆசிரியரை தொந்தரவு செய்கிறாயா'? (புன்னகைக்கிறார்). சரி, சொல்.

சிறுவன் (பயனாளிக் குழந்தை): எனக்கு 2023-ல் அறுவை சிகிச்சை நடந்தது, நான் வளர்ந்த பிறகு ஒரு ஆசிரியராக விரும்புகிறேன். ஏழை குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்க விரும்புகிறேன், அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும், ஏனென்றால் கல்விதான் நமது நாடு வளர உதவுகிறது.

பிரதமர்: இந்த மாதம் யாருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது என்று உங்கள் அனைவருக்கும் தெரியுமா? சத்ய சாய் பாபாவின் 100-வது ஆண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு, புட்டபர்த்தி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவியது. சுமார் 400 கிராமங்களுக்குக் குடிநீர் கொண்டு வர அவர் கடுமையாக உழைத்தார். இவ்வளவு பெரிய பணிகளைச் செய்ய சில நேரங்களில் அரசாங்கங்களே தயங்கும். நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் மற்றும் மரங்களை நட வேண்டும் என்பதுதான் அவர் நமக்குச் சொல்லும் செய்தி. உங்களுக்குத் தெரியுமா, நான் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறேன். எல்லோருக்கும் தங்கள் அம்மாவைத் பிடிக்கும், இல்லையா? எனவே நாம் அவர் பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும் - அதன் மூலம் நமது தாய்க்கும், அன்னை பூமிக்கும் நமது நன்றியைச் செலுத்தலாம்.

சிறுவன்: என் பெயர் அபிக், நான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன். நான் வளர்ந்த பிறகு, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்.

பிரதமர்: நீ நாட்டுக்குச் சேவை செய்வாயா?

சிறுவன்: ஆம்.

பிரதமர்: நிச்சயமா?

சிறுவன்: ஆம், நிச்சயம்.

பிரதமர்: உனக்கு ஏன் அப்படித் தோன்றுகிறது?

சிறுவன்: ஏனென்றால் ராணுவ வீரர்கள் நம்மைப் பாதுகாக்கிறார்கள், நானும் தேசத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்!

பிரதமர்: அற்புதம், அற்புதம்.

சிறுவன்: நான் உங்களுடன் கைகுலுக்க விரும்புகிறேன்.

சிறுவன்: உங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

பிரதமர்: அப்படியா? அந்தக் கனவு எப்போது வந்தது - இன்றா அல்லது முன்னரேவா?

சிறுவன்: நீண்ட காலத்திற்கு முன்பே.

பிரதமர்: உனக்கு என்னைப் பற்றித் தெரியுமா?

சிறுவன் (பயனாளிக் குழந்தை): ஆம், உங்களை நான் செய்திகளில் பார்த்திருக்கிறேன்.

பிரதமர்: ஓ, நீ செய்திகள் பார்ப்பாயா? மிக நன்று. உங்கள் அனைவருடனும் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் என்ன நல்ல காரியங்களைச் செய்ய விரும்பினாலும், உங்கள் உடல் தான் அதை அடைவதற்கான கருவி. எனவே உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் — சில யோகாசனங்களைச் செய்யுங்கள், ஒரு சீரான நடைமுறையைப் பின்பற்றுங்கள், சரியான நேரத்திற்குத் தூங்குங்கள். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், சரியா? சத்தியமா?

சிறுவர்கள்: ஆம், ஐயா!

பிரதமர்: உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

**

(Release ID: 2185279)

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2212342) வருகையாளர் எண்ணிக்கை : 12