பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 11 DEC 2025 8:43PM by PIB Chennai

மேதகு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, டிசம்பர் 15 முதல் 16 வரை ஜோர்டானின் ஹாஷிமைட் ராஜ்ஜியத்திற்கு பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர், மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனைச் சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், இந்திய-ஜோர்டான் இருதரப்பு ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான புதிய ஒத்துழைப்பு வழிகளை ஆராயவும், பிராந்திய அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இதைத் தொடர்ந்து, எத்தியோப்பியா பிரதமர் மாண்புமிகு டாக்டர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு மோடி, டிசம்பர் 16 முதல் 17 தேதிகளில் எத்தியோப்பியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார். இது திரு மோடியின் முதல் எத்தியோப்பியா பயணமாகும். இந்திய - எத்தியோப்பிய இருதரப்பு உறவுகளின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் டாக்டர் அபி அகமது அலியுடன் அவர் விரிவான விவாதங்களை நடத்துவார். இரு நாடுகளும் நெருங்கிய நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் தளமாக இந்தப் பயணம் அமையும்.

தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக, ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, டிசம்பர் 17 முதல் 18 வரை ஓமன் நாட்டிற்குப் பயணிப்பார். இது ஓமன் நாட்டிற்கான பிரதமர் திரு  மோடியின் இரண்டாவது பயணமாகும். இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு, வர்த்தக இணைப்புகள் மற்றும் மக்களிடையேயான வலுவான உறவுகளால் ஆதரிக்கப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு உத்திசார் கூட்டாண்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன்  70 ஆண்டுகளைக் குறிக்கும். மேலும் 2023 டிசம்பரில் ஓமன் மன்னர் சுல்தான் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இரு தரப்பினருக்கும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் உட்பட இருதரப்பு கூட்டாண்மையை விரிவாக மதிப்பாய்வு செய்வதற்கும், பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும்  இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

***

(Release ID: 2202611)

ADRB/KR


(रिलीज़ आईडी: 2212095) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam