உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீவிஜயபுரத்தில் உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார்

அடுத்த 5 ஆண்டுகளில் தடயவியல் ஆய்வகக் கட்டமைப்பை வலுப்படுத்த ₹30,000 கோடி செலவிடப்படும்: திரு அமித் ஷா

2029-ம் ஆண்டுக்குள், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தடயவியல் பல்கலைக்கழகம் அல்லது ஒரு மத்திய தடயவியல் ஆய்வகம் செயல்படும்: திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 03 JAN 2026 6:59PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜயபுரத்தில் உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு இன்று (03.01.2026) தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தின் முக்கிய விவாதக் கருப்பொருள், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகம், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் என்பதாகும். மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு பண்டி சஞ்சய் குமார், நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், மத்திய உள்துறைச் செயலாளர், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர், காவல் ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர், பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, உள்துறை அமைச்சகம் 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 12 நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும், அவை நல்ல பலனைத் தந்துள்ளதாகவும் கூறினார். புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும்போது, நீதித் துறை செயல்பாடு மேலும் விரைவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார். 2022-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நல்ல பலனைத் தந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நீதித் துறை செயல்முறையில் தடயவியல் திறன்களை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு 2020-ம் ஆண்டு முதலே தடயவியல் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார். புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வந்தன என்றும் ஆனால் 2020-ம் ஆண்டு முதலே தடயவியல் கண்ணோட்டத்தில் அவற்றை செயல்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும், தற்போது நேர்மறையான முடிவுகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, விசாரணைகளின் வேகமும், தண்டனை விகிதமும் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 62 நாட்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்றும், பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடந்த மூன்று கொலை வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கு 50 நாட்களில் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

முன்பு, தடயவியல் விசாரணைகளில் பெரும் தொழில்நுட்ப இடைவெளி காரணமாக ஆதாரங்களின் தரம் குறைவாக இருந்தது எனவும், தடயவியல் ஆய்வகங்கள் பற்றாக்குறை இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். புதிய சட்டங்களின் விதிகளின்படி, தடயவியல் ஆய்வகங்கள் இப்போது தங்கள் அறிக்கைகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி, காவல்துறைக்கு ஒரு நகலை வழங்கும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் தடயவியல் ஆய்வகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்யவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

 

புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பில் 1 கோடியே 21 லட்சம் கைரேகைகள் கிடைக்கின்றன என்றும் இது வழக்குகளின் விசாரணையில் காவல்துறைக்கு உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டில் தற்போது மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் இருப்பதாகவும், 8 புதிய ஆய்வகங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2029-ம் ஆண்டுக்குள், 35 ஆயிரம் மாணவர்கள் தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தில் படிப்பார்கள் என்று அவர் கூறினார்.  இதுவரை, இந்தப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 14 வளாகங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், இந்தப் பல்கலைக்கழகம் தற்போது 100-க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 2029-ம் ஆண்டுக்குள், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தடயவியல் பல்கலைக்கழகம் அல்லது ஒரு மத்திய தடயவியல் ஆய்வகம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211128&reg=3&lang=1

(Release ID: 2211128)

****

AD/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2211183) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam