ஆயுஷ்
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சார்பில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது
प्रविष्टि तिथि:
21 DEC 2025 6:38PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இன்று (21.12.2025) உலக தியான தினத்தைக் கொண்டாடியது. இதனையொட்டி, புகழ்பெற்ற அறிஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற சிறப்பு தியான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தை நீக்குவதில் பழங்கால யோக ஞானம், நவீன மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் காஷிநாத் சமகாந்தி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் தியானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீத மன அழுத்தம் தொழில் சார்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார்.
புது தில்லியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த சுவாமி முக்திமாயனந்தா பேசுகையில் நிலையான அமைதிக்காக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். கர்வம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசைகள் போன்றவற்றை வெற்றி கொள்ள, முறையான பயிற்சிகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார் .
பல்வேறு தியான நுட்பங்களின் நடைமுறை செயல் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. "ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இந்தியா" என்ற தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவதற்காக அன்றாட வாழ்வில் தியானத்தை இணைப்பதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. யோகா, தியான ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு தனிநபரும் உயர்ந்த உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை, டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207225®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207274)
आगंतुक पटल : 6