குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தூரில் நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
நவீன இந்தியாவின் சிற்பி அடல் பிகாரி வாஜ்பாய் - குடியரசுத் துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
21 DEC 2025 5:37PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.12.2025) பங்கேற்றார். இந்த நிகழ்வை அடல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
திருக்குறளில் இருந்து ஒரு குறளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்றாலும், ஒருவரின் செயல்கள் மூலம் தனிச்சிறப்புகள் வெளிப்படுகின்றன என்று கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் சாதாரண மனிதர் அல்ல என்றும், லட்சியம், கொள்கைகள், மதிப்புகளில் உறுதியுடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். அரசியல்வாதி, நிர்வாகி, நாடாளுமன்றவாதி, கவிஞர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த மனிதராக அவர் திகழ்ந்தார் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
அடல் பிகாரி வாஜ்பாய் பொது நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டார் என்றும் அதனால்தான் வாஜ்பாயின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கடைபிடிப்படுகிறது என்றும் அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், அது நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை என்று கூறினார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தங்க நாற்கர சாலைத் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார். 1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், திரு வாஜ்பாயின் தலைமை இந்தியாவை ஒரு தன்னம்பிக்கையும் தன்னிறைவும் பெற்ற நாடாக உறுதியாக நிலைநிறுத்தியது என்று கூறினார். 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வை முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207208®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207247)
आगंतुक पटल : 11