தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், காசநோய் பாதிப்பு குறித்து கண்டறியப்படாத நபர்களை அடையாளம் காணவும், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், நாடு முழுவதும் புதிய தொற்று பரவல் ஏற்படாதவாறு தடுக்கவும், புதிய நடைமுறைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் காசநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஊகிக்கப்படும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணுதல், மார்பு ஊடுகதிர் பரிசோதனை, நோயாளிகளுக்கு முன்கூட்டியே நியூக்ளிக் அமில பெருக்க பரிசோதனை, உடனடி மற்றும் பொருத்தமான மருத்துவ சிகிச்சையைத் தொடங்குதல், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களை நிர்வகிப்பதற்கான மாற்றுமுறை காசநோய் பராமரிப்பு நடவடிக்கைகள், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபரின் குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்குதல் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ சிகிச்சை ஆகியவை அடங்கும். நாடு முழுவதும் உள்ள காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் விவரங்களைப் பதிவு செய்ய நிக்-க்ஷய் என்ற இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுமக்களுக்கு காசநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கான அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் காசநோய்க்கான மருத்துவ சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
நவம்பர் 1, 2024 முதல், ஊட்டச்சத்து உறுதித் திட்டத்தின் கீழ், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, சிகிச்சையின் முழு காலத்திற்கும், ஒரு நோயாளிக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2018 முதல், 1.35 கோடி காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4,322 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200795®=3&lang=1
***
SS/SV/SH