சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரேசிலில் நடைபெற்ற சிஓபி 30 மாநாட்டில் சர்வதேச புலிகள் கூட்டணி குறித்த உயர்நிலை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்

Posted On: 18 NOV 2025 5:17AM by PIB Chennai

பிரேசிலில் பெலேம் நகரில் 2025 நவம்பர் 17 அன்று நடைபெற்ற சிஓபி 30 மாநாட்டில் சர்வதேச புலிகள் கூட்டணி குறித்த  உயர்நிலை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில்  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்  திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். ஒருங்கிணைந்த பருவநிலை மற்றும் பல்லுயிர் பெருக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்திற்கு நேபாள அரசின் வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் டாக்டர் மதன் பிரசாத் பரியார் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக பிரேசில் அரசுக்கு நன்றி தெரிவித்த திரு பூபேந்தர் யாதவ், புலிகள் பாதுகாப்பு, பருவநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு என்ற மையப் பொருளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  சுற்றுச்சூழல் சவால்கள் இன்று ஒன்றோடொன்று ஆழமாக தொடர்புடையதாக உள்ளது என்பதையும் இதற்கு ஒருங்கிணைந்த தீர்வுகள்  தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். புலிகள் பாதுகாக்கப்படும் போது வனங்கள்   வளமாக இருக்கும் என்றும்  புல்வெளிகள் புத்துயிர் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முன்முயற்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச புலிகள் கூட்டணியின்  உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இது நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றில் வேரூன்றி இருப்பதாகவும்  திரு யாதவ் கூறினார்.

இந்தக் கூட்டணியில், இதுவரை 17 நாடுகள் இடம் பெற்றிருப்பதாகவும்  மேலும் 30 நாடுகள் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பின்னணியில், அடுத்த ஆண்டு புதுதில்லியில் உலகளாவிய புலிகள் உச்சிமாநாட்டை மத்திய அரசு  நடத்த உள்ளது என்று அவர் தெரிவித்தார். புலிகள் வசிக்கும் நாடுகள், புலிகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதில் தங்களின் அனுபவங்கள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்புவிடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191068&reg=3&lang=1

***

SS/SMB/KPG/KR


(Release ID: 2191177) Visitor Counter : 6