உலகளாவிய கூட்டுத் தயாரிப்புச் சந்தைக்கான வலுவான தளமாக அமைகிறது வேவ்ஸ் ஃபிலிம் பஜார்
இந்தியாவின் முதன்மை திரைப்படச் சந்தையான வேவ்ஸ் பஜாரின் 19-வது பதிப்பு கோவாவில் நடைபெறவுள்ளது. இது முன்னர் ஃபிலிம் பஜார் என்று அழைக்கப்பட்டு, இப்போது வேவ்ஸ் ஃபிலிம் பஜார் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது, சர்வதேச நிதியுதவியுடன் திரைப்படங்கள், ஆவணப்படங்களுக்கான வலுவான கூட்டுத் தயாரிப்பு சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது. 56-வது இந்திய சர்வதேச
திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, வேவ்ஸ் ஃபிலிம் பஜார் 2025 நவம்பர் 20 முதல் 24 வரை கோவாவில் உள்ள மேரியட் ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது.
தற்போதைய 19-வது பதிப்பில், வேவ்ஸ் பிலிம் பஜார் 22 சிறப்புத் திட்டங்களுடன் உலகளாவிய கதை உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. கூட்டுத் தயாரிப்புச் சந்தையில் இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான தயாரிப்புத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாறுபட்ட வரிசையில் இந்தி, உருது, பெங்காலி, மணிப்பூரி, தங்குல், நேபாளி, மலையாளம், ஹரியான்வி, ஆங்கிலம், குஜராத்தி, லடாக்கி, கொங்கனி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, காஷ்மீரி, ரஷ்யன், சமஸ்கிருதம், ஒடியா போன்ற மொழிகளில் கதைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்கள், தங்கள் திரைப்படத் திட்டங்கள் குறித்த தகவல்களை சர்வதேச - இந்திய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் ஆகியோரிடம் திறந்தவெளி அமர்வின் போது வழங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த தளம் நேருக்கு நேர் சந்திப்புகளுக்கான அடித்தளத்தை அமைத்து, எதிர்காலத்தில் ஒத்துழைப்புகளை உருவாக்கும்.
கூடுதலாக, இந்தப் பதிப்பில் கூட்டுத் தயாரிப்புச் சந்தை வரிசையில் 5 ஆவணப்படங்களும் இடம்பெறுகின்றன. ஐந்து குறிப்பிடத்தக்க ஆவணப்படங்கள் கலை, இசை, கலாச்சாரம், சுற்றுச்சூழல், நிலைத்தன்மை, கல்வி, பெண் உரிமை, பாலின சமத்துவம், மானுடவியல் போன்ற கருத்துகளை உள்ளடக்கியவையாகும்.
வேவ்ஸ் ஃபிலிம் பஜார் என்பது முன்பு பிலிம் பஜார் என்று அழைக்கப்பட்டது. இந்த வேவ்ஸ் ஃபிலிம் பஜார் ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 2007-ம் ஆண்டு ஃபிலிம் பஜார் தொடங்கப்பட்டதிலிருந்து, திரைப்படத் தயாரிப்பை ஆதரிப்பதில் இது கவனம் செலுத்தி வருகிறது. இது தெற்காசிய பிராந்தியத்தில் உலக சினிமாவின் வர்த்தகத்தையும் எளிதாக்குகிறது.
மேலும் தகவல்களுக்கு https://films.wavesbazaar.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190471
***
SS/PLM/RJ
Release ID:
2190530
| Visitor Counter:
6