பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் நவம்பர் 15-ந் தேதி பார்வையிடுகிறார்

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தின் முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்கிறார்

மும்பை-அகமதாபாத் பயண நேரத்தை சுமார் இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் புல்லட் ரயில்

Posted On: 14 NOV 2025 11:43AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில், மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தின்  முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக பிரதமர் சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தைப் பார்வையிடுவார் - இது நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான  மிகவும் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் சுமார்  508 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும்.  இது குஜராத் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலியில் 352 கி.மீ தூரத்துக்கும்,மகாராஷ்டிராவில் 156 கி.மீ. தூரத்துக்கும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும், இது இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

சர்வதேச தரத்திற்கு இணையான மேம்பட்ட பொறியியல் நுட்பங்களுடன் கட்டப்பட்டு வரும் இந்தத் திட்டம், 465 கிமீ (பாதையில் சுமார் 85%) பாலங்களைக் கொண்டுள்ளது, இது குறைந்தபட்ச நிலம் கையகப்படுத்தல் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுவரை, 326 கிமீ வழித்தடப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 25 நதி பாலங்களில் 17 ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கும் போது,  மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையிலான பயண நேரம் சுமார்  இரண்டு மணி நேரமாகக் குறையும்.  நகரங்களுக்கு இடையேயான பயணத்தை வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதன் மூலம் புரட்சியை ஏற்படுத்தும். இந்தத் திட்டம் முழு வழித்தடத்திலும் வணிகம், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும், பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 47 கிமீ நீளமுள்ள சூரத்-பிலிமோரா பிரிவில், கட்டுமானப் பணிகள் மற்றும் தண்டவாளப் பாதை அமைத்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. சூரத் நிலையத்தின் வடிவமைப்பு, நகரத்தின் உலகப் புகழ்பெற்ற வைரத் தொழிலைப் பிரதிபலிக்கிறது. பயணிகளின் வசதியை மையமாகக் கொண்டு இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான காத்திருப்பு ஓய்வறைகள்,  மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இதில் உள்ளன. இது சூரத் மெட்ரோ, நகரப் பேருந்துகள் மற்றும் இந்திய ரயில்வே கட்டமைப்புடன் தடையற்ற பல-மாதிரி போக்குவரத்து இணைப்பையும் வழங்கும்.

***

(Release ID: 2189912)

SS/PKV/AG/KR


(Release ID: 2189964) Visitor Counter : 10