ஜல்சக்தி அமைச்சகம்
நீர் பாதுகாப்பு மக்கள் பங்களிப்பு விருதுகளை 2025, நவம்பர் 18 அன்று குடியரசுத்தலைவர் வழங்குகிறார்- தமிழ்நாட்டுக்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
Posted On:
11 NOV 2025 1:54PM by PIB Chennai
நீர் பாதுகாப்பு மக்கள் பங்களிப்பு 1.0 முன்முயற்சியின் கீழ் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இன்று அறிவித்தது. முதல் முறையாக வழங்கப்படும் இவ்விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2025 நவம்பர் 18 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குகிறார். 6-வது தேசிய நீர் விருதுகளையும் அப்போது அவர் வழங்கவுள்ளார்.
இந்த இயக்கம் 2024 செப்டம்பர் 06 அன்று குஜராத் மாநிலம் சூரத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் செயற்கை முறையிலும், நீர் சேகரிப்பு முறையிலும் குறைந்தது 10,000 நீர் நிலைகளை அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. வடகிழக்கு பிராந்திய மற்றும் மலை மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு இந்த எண்ணிக்கை 3000 ஆகவும், நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு 10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
நகர்ப்புற நீர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறைந்தது 2000 நீர்நிலைகள் கட்ட ஊக்குவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 100 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மையாக செயல்பட்டுள்ள 3 மாநிலங்களுக்கும், 67 மாவட்டங்களுக்கும், 6 நகராட்சிகளுக்கும், ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும், 2 அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், 2 தொழில்துறையினருக்கும், 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், 2 கொடையாளர்களுக்கும், 14 பொறுப்பு அதிகாரிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களின் அடிப்படையில் 3-வது வகைப்பிரிவில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் 2-வது இடத்தையும், நாமக்கல் 10-வது இடத்தையும், ராமநாதபுரம் 13-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் கோயம்புத்தூர் 28,147 பணிகளையும், நாமக்கல் 7,057 பணிகளையும், ராமநாதபுரம் 5,269 பணிகளையும் நிறைவு செய்துள்ளன. மாவட்டங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188706
***
SS/IR/AG
(Release ID: 2188838)
Visitor Counter : 19