குடியரசுத் தலைவர் செயலகம்
இந்தியா- அங்கோலா இடையே இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது : குடியரசுத்தலைவர்
Posted On:
10 NOV 2025 10:27PM by PIB Chennai
அங்கோலா நாட்டிற்கான இந்திய தூதர் லுவான்டாவில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார் (2025 நவம்பர் 10). இந்நிகழ்ச்சியில் ஜல்சக்தி மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு வி சோமண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு பர்புபாய் நாகர்பாய் வாசவா, திருமதி டி கே அருணா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய குடியரசுத்தலைவர், ஆப்பிரிக்க நாடுகளுடன் குறிப்பாக அங்கோலாவுடன் இந்தியா சிறந்த நட்புறவை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டாண்மை சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான பகிரப்பட்ட விருப்பங்களில் அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய கூட்டாளியாக உள்ளது என்றும் அங்கோலாவின் முதன்மை வர்த்தக கூட்டாளியாக இந்தியா திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்தியா-அங்கோலா இடையேயான இருதரப்பு வர்த்தகம் வரலாற்று சிறப்புமிக்க வகையில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடந்தது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். அங்கோலாவுக்கு மருந்து பொருட்கள், உணவு பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகம், சுற்றுலா, வைரங்கள், எரிசக்தி, உள்கட்டமைப்பு, விருந்தோம்பல், வேளாண்மை போன்ற பல துறைகளில் இந்திய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த முதலீடுகள் அங்கோலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கோலாவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 8000 பேர் வசிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். அவர்களுடைய தொழில்முனைவு உத்வேகம், கடின உழைப்பு, தொழில் திறன் ஆகியவை அங்கோலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா- அங்கோலா இடையே வர்த்தகம், முதலீடு, இருநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188575
***
SS/IR/AG
(Release ID: 2188698)
Visitor Counter : 11