பிரதமர் அலுவலகம்
பிரிட்டன் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு
Posted On:
09 OCT 2025 12:55PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் ஸ்டார்மர் அவர்களே,
இரு நாடுகளிலிருந்தும் வந்துள்ள பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
மும்பையில் இன்று இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தில் பிரதமர் கியர் ஸ்டார்மரை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
பிரதமர் ஸ்டார்மரின் தலைமையில், இந்தியா - பிரிட்டன் உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் இறுதிபடுத்தினோம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான இறக்குமதிச் செலவுகளைக் குறைக்கும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வர்த்தகத்தை மேம்படுத்தும், மேலும் நமது தொழில்துறைகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பயனளிக்கும்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சில மாதங்களிலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகப் பிரதிநிதிகள் குழுவுடன் நீங்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வது, இந்தியா - பிரிட்டன் கூட்டாண்மையை இயக்கும் புதிய ஆற்றலையும் பரந்த பார்வையையும் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
நேற்று இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே வணிகத் தலைவர்களின் மிகப்பெரிய உச்சிமாநாடு நடைபெற்றது. இன்று நாங்கள் இந்தியா - பிரிட்டன் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றம் மற்றும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவிலும் உரையாற்றுவோம். இவை மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்டு வரும், மேலும் இந்தியா-பிரிட்டன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறக்கும்.
நண்பர்களே,
இந்தியாவும் பிரிட்டனும் இயல்பான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் இன்றைய காலத்தில், நமது வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் முக்கியமான தூணாக நிற்கிறது.
இன்றைய சந்திப்பில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல் குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுகள் மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையேயான தொழில்நுட்பக் கூட்டாண்மையில் அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. பிரிட்டன் தொழில்துறை நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை, இந்தியாவின் திறமை மற்றும் அளவுடன் இணைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கடந்த ஆண்டு, இந்தியா - பிரிட்டன் தொழில்நுட்ப பாதுகாப்பு முயற்சியை நாங்கள் தொடங்கினோம். இந்த முயற்சியின் கீழ், முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான வலுவான தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். புதுமை பாலத்தின் மூலம் இரு நாடுகளின் இளைஞர்களையும் இணைக்க, 'இணைப்பு மற்றும் புதுமை மையம்' மற்றும் 'கூட்டு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம்' நிறுவுதல் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
முக்கியமான கனிமங்கள் மீதான ஒத்துழைப்புக்காக ஒரு தொழில் அமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி கண்காணிப்பகத்தை நிறுவ முடிவு செய்துள்ளோம். அதன் துணை வளாகம் ஐஎஸ்எம் தன்பாத்தில் அமைந்திருக்கும்.
நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு நாங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளோம். இந்தத் திசையில், இந்தியா-பிரிட்டன் கடல் காற்றாலை பணிக்குழு உருவாக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
காலநிலை தொழில்நுட்ப புத்தொழில் நிதியை நிறுவியுள்ளோம். இது காலநிலை, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் பணியாற்றும் இரு நாடுகளின் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்கும்.
நண்பர்களே,
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை முதல் கல்வி மற்றும் புதுமை வரை, இந்தியாவும் பிரிட்டனும் தங்கள் உறவில் புதிய பரிமாணங்களை வடிவமைத்து வருகின்றன.
இன்று, பிரதமர் ஸ்டார்மருடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய, மிகவும் செல்வாக்குமிக்க கல்வித் துறை பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது. பல பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் இப்போது இந்தியாவில் வளாகங்களை நிறுவி வருவது மிகுந்த மகிழ்ச்சியான விஷயம். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குருகிராம் வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது, மேலும் முதல் தொகுதி மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்துள்ளனர். கூடுதலாக, கிப்ட் நகரில் மூன்று பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் வளாகங்களின் கட்டுமானப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நமது பாதுகாப்பு ஒத்துழைப்பும் ஆழமடைந்துள்ளது. நாங்கள் பாதுகாப்பு இணை உற்பத்தியை நோக்கி நகர்ந்து வருகிறோம் மேலும் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளை இணைத்து வருகிறோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் வகையில், ராணுவப் பயிற்சியில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம், இதன் கீழ் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமான பயிற்சியாளர்கள் பிரிட்டன் விமானப்படையில் பயிற்றுவிப்பாளர்களாக பணியாற்றுவார்கள்.
இந்தச் சந்திப்பு நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் நடைபெறும் அதே வேளையில், நமது கடற்படைக் கப்பல்கள் "கொங்கன் 2025" கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன என்பது ஒரு சிறப்பு தற்செயல் நிகழ்வாகும்.
நண்பர்களே,
பிரிட்டனில் வசிக்கும் 1.8 மில்லியன் இந்தியர்கள் நமது கூட்டாண்மையின் உயிரோட்டமான பாலமாக உள்ளனர். பிரிட்டிஷ் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்திற்கான அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகள் மூலம், அவர்கள் நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்தின் பிணைப்புகளை வலுப்படுத்தியுள்ளனர்.
நண்பர்களே,
இந்தியாவின் ஆற்றலும் பிரிட்டனின் நிபுணத்துவமும் சேர்ந்து ஒரு தனித்துவமான ஒருங்கிணைப்பை உருவாக்குகின்றன. நமது கூட்டாண்மை நம்பகமானது, மேலும் திறமை மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இன்று, பிரதமர் ஸ்டார்மரும் நானும் இந்த மேடையில் ஒன்றாக நிற்பது, நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் கைகோர்த்து பணியாற்றுவதற்கான எங்களது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
மீண்டும் ஒருமுறை, இந்தியாவுக்கு வருகை தந்ததற்காக பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
***
(Release ID 2176681)
SS/VK/KR
(Release ID: 2187267)
Visitor Counter : 9
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam