PIB Headquarters
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்: “இந்தியாவின் கூட்டுறவு சூழலை வலுப்படுத்துதல்”
Posted On:
05 NOV 2025 3:24PM by PIB Chennai
கடந்த பல ஆண்டுகளாக, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம், தொடர்ச்சியான நிதி உதவி மூலம் இந்தியாவின் கூட்டுறவுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் நிலையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இக்கழகத்தின் மூலம் கடன் வழங்குவது 2014-15-ம் ஆண்டில் ரூ.5,735.51 கோடி என்பதிலிருந்து 2024-25-ம் ஆண்டில் ரூ.95,182.88 கோடியாக அதிகரித்துள்ளது. இது பல்வேறு துறைகளில் அதன் விரிவடையும் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்த மேல்நோக்கிய பாதையைத் தொடர்ந்து, 2025–26-ம் ஆண்டில், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் அக்டோபர் 2025 வரை ரூ.49,799.06 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வலுவான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கூடுதலாக, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்க, இக்கழகம் கடந்த நான்கு ஆண்டுகளில் (நிதியாண்டு 2021-22 முதல் நிதியாண்டு 2024-25 வரை) எஸ்சி /எஸ்டி கூட்டுறவுகளுக்கு ரூ.57.78 கோடி கடன் வழங்கியுள்ளது. இது கூட்டுறவு வளர்ச்சியின் நன்மைகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைவதை உறுதி செய்கிறது.
நிதி ஆதரவில் ஏற்பட்ட இந்தத் தொடர்ச்சியான அதிகரிப்பின் மூலம், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் அதன் வளர்ச்சிப் பாதையை விரிவுபடுத்தியுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மதிப்புத் தொடர்களை வலுப்படுத்தவும், உயர் வளர்ச்சித் துறைகளாகப் பன்முகப்படுத்தவும் இக்கழகம் உதவுகிறது. கடன் வழங்கல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, கூட்டுறவின் தலைமையில் வளர்ச்சிக்கான வளர்ந்து வரும் தேவையை மட்டுமின்றி, சரியான நேரத்தில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கடனை வழங்குவதற்கான இதன் மேம்பட்ட நிறுவனத் திறனையும் பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்தத் தலையீடுகள் இந்தியாவில் தற்சார்பு கூட்டுறவுச்சூழல் அமைப்பை முன்னேற்றுவதில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பங்களிப்பை நிரூபிக்கின்றன.
கூட்டுறவுத் துறையின் பல்வேறு பிரிவுகளை வலுப்படுத்தவும், புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கவும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் பல இலக்குத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
2025–26 முதல் 2028–29 வரையிலான காலகட்டத்தில் ரூ.2,000 கோடி மொத்த செலவினத்துடன் "தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு உதவி மானியம்" என்ற மத்திய துறைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ரூ.500 கோடி விடுவிக்கப்படும், இதன் மூலம் இந்த மானியங்களைப் பயன்படுத்தி இக்கழகம் நான்கு ஆண்டு காலத்தில் வெளிச்சந்தையில் இருந்து சுமார் ரூ.20,000 கோடியைத் திரட்ட முடியும்.
இந்த மேம்படுத்தப்பட்ட நிதித் திறன், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும், ஏற்கனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றின் செயல் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன்களை வழங்க உதவும். நாடு முழுவதும் பால்வளம், கால்நடை, மீன்வளம், சர்க்கரை, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு, தொழிலாளர் மற்றும் பெண்கள் தலைமையிலான கூட்டுறவு போன்ற பல்வேறு துறைகளில் உள்ள 13,288 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த சுமார் 2.9 கோடி உறுப்பினர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186643
********
AD/SMB/SH
(Release ID: 2186719)
Visitor Counter : 5