தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக வளர்ச்சிக்கான உலக உச்சிமாநாடு: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்கிறது

Posted On: 03 NOV 2025 4:54PM by PIB Chennai

சமூக வளர்ச்சிக்கான இரண்டாவது உலக உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கி தோஹா செல்கிறார். இந்த மாநாடு 2025 நவம்பர் 4 முதல் 6 வரை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது.

மாண்டவியா அவர்கள் உச்சிமாநாட்டின் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்று, இந்தியாவின் தேசிய அறிக்கையை வழங்குவதுடன், உலகத் தலைவர்களுடன் இணைந்து தோஹா அரசியல் பிரகடனத்தை ஏற்கவுள்ளார். மேலும், "சமூக வளர்ச்சியின் மூன்று தூண்களை வலுப்படுத்துதல்" குறித்த உயர்மட்டக் கலந்துரையாடலில் உரையாற்ற உள்ளார். உள்ளடக்கிய மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தைப் பகிர்ந்து கொள்வார்.

நாட்டில் வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 2011 மற்றும் 2023-க்கு இடையில் 248 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு வகையிலான வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரதமரின் ஏழைகள் மற்றம் புலம் பெயர்ந்தோருக்கான இலசவ உணவு தானிய திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம் மற்றும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு போன்ற முக்கியத் திட்டங்கள் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகும்.

இந்த மாநாட்டில், "வறுமையிலிருந்து வெளியேறும் வழிமுறைகள்: கடைக்கோடி மக்களைச் சென்றடைந்த இந்தியாவின் அனுபவம்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கிறது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் போன்ற இந்தியாவின் சாதனைகள் இதில் காட்சிப்படுத்தப்படும். அத்துடன், டாக்டர் மாண்டவியா, சமூக நீதி குறித்த உலகளாவிய கூட்டமைப்பு பற்றிய சர்சதேச தொழிலாளர் அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான  நிகழ்விலும் பங்கேற்கிறார்.

உச்சிமாநாட்டின் போது, மத்திய அமைச்சர் கத்தார், ருமேனியா, மொரிஷியஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் ஐஎல்ஓ தலைமை இயக்குநர் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185893

வெளியீட்டு அடையாள எண் : 2185893

***

AD/VK/SH


(Release ID: 2186098) Visitor Counter : 6