பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் 2025 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Posted On: 03 NOV 2025 11:13AM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03 நவம்பர் 2025) உரையாற்றினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களை பிரதமர் வரவேற்றார்.

ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை 2025-ல் இந்தியா பெற்ற சிறப்பான வெற்றி குறித்து பேசிய திரு மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியால், ஒட்டுமொத்த நாடே உற்சாகம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இது இந்தியாவின் முதலாவது மகளிர் உலகக்கோப்பை வெற்றி என்றும் மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார். நாடு அவர்களால் பெருமைப்படுவதாகவும் அவர்களுடைய சாதனை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளையோருக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் மகத்துவமான முன்னேற்றத்தைக் கண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்திய விஞ்ஞானிகள் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், இப்பணியில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும், இஸ்ரோவிற்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கும் இன்று ஒரு மைல்கல் நாள் என்று திரு மோடி கூறினார். 21-ம் நூற்றாண்டில், உலகளாவிய நிபுணர்கள் ஒன்றிணைந்து வளர்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் குறித்து ஆலோசித்து வழிகாட்டுதலை வழங்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தேவை, ஒரு சிந்தனைக்கு வழிவகுத்து, இந்த மாநாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையாக உருவானது என்று அவர் கூறினார். இந்த மாநாட்டின் மூலம் இந்த தொலைநோக்குப் பார்வை தற்போது வடிவம் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த முயற்சியில் பல்வேறு அமைச்சகங்கள், தனியார் துறை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இன்று நம்மிடையே நோபல் பரிசு பெற்ற ஒருவர் இருப்பது கௌரவம் என்று அவர் கூறினார். அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், இம்மாநாடு வெற்றிபெற தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டு முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றத்தின் காலம் என்று குறிப்பிட்ட திரு மோடி, உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் காண்கிறது என்றும், மாற்றம் அதிவேகமானது என்றும் குறிப்பிட்டார். இந்தக் கண்ணோட்டத்துடன், இந்தியா வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் முன்னேறிச் செல்கிறது என்றும், அவற்றில் நிலையான கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். உதாரணமாக, ஆராய்ச்சி நிதியுதவிப் பகுதியை எடுத்துரைத்த அவர், 'ராணுவ வீர்ர் வாழ்க, விவசாயி வாழ்க' (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற பிரபலமான தேசிய தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்தார். மேலும் ஆராய்ச்சிக்கு புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன், 'அறிவியல் வாழ்க' மற்றும் 'ஆராய்ச்சி வாழ்க' ஆகியவையும் இந்த தொலைநோக்குப் பார்வையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை அதிகரிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். தனியார் துறையிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். முதல் முறையாக, அதிக இடர்பாடு மிக்க மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மூலதனம் கிடைப்பதாக திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியா ஒரு நவீன கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை உருவாக்க செயல்பட்டு வருகிறது என்றும், மேலும் ஆராய்ச்சியை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். நிதி விதிமுறைகள் மற்றும் கொள்முதல் கொள்கைகளில் அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார். அத்துடன், முன்மாதிரிகள் ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு விரைவாக கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறைகள், சலுகைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185694

***

AD/IR/LDN/RJ


(Release ID: 2185742) Visitor Counter : 14