பாதுகாப்பு அமைச்சகம்
'செகோன் இந்திய விமானப்படை மாரத்தான் 2025' பிரம்மாண்டமாக நிறைவு
Posted On:
02 NOV 2025 5:11PM by PIB Chennai
முதன்முதலாக நடத்தப்பட்ட செகோன் இந்திய விமானப்படை மாரத்தான் 2025, உடற்தகுதி, வீரம் மற்றும் தேசப் பெருமையைக் கொண்டாடும் வகையில், நாட்டையே ஒன்றிணைத்து பிரம்மாண்டமாக நிறைவடைந்தது.
தில்லியில் நடைபெற்ற இந்தப் பிரதான மாரத்தானில் ஆடவர், மகளிர் மற்றும் அனைத்து வயதுக் குழந்தைகள் உள்பட 12,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் உள்ள 46 விமானப்படை நிலையங்களில் இருந்து, 21 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 5 கி.மீ எனப் பல்வேறு பிரிவுகளில் 45,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இது இந்திய விமானப்படையின் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒருங்கிணைப்பு, உற்சாகம் மற்றும் கூட்டுப் பெருமையின் உணர்வைப் பிரதிபலித்தது.
இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் , தானே 21 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்று, முன்மாதிரியான உடற்தகுதியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். இது விமானப்படை வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்தது.
உடலை சூடேற்றும் ஜூம்பா உடற்பயிற்சியுடன் மாரத்தான் உற்சாகமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை இசைக்குழுவின் உத்வேகமான நிகழ்ச்சிகள், விமானப் படை வீரர்களின் துல்லியமான அணிவகுப்பு, மற்றும் மூச்சடைக்க வைக்கும் ஸ்கை டைவிங் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றின் இந்த கூட்டு, இந்திய விமானப்படையின் நெறிமுறைகளைச் சரியாகப் பிரதிபலித்தது.
நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டும் வகையில், நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபலமான நடிகர்களான ஹுமா குரேஷி, ஷெஃபாலி ஷா, அர்ச்சனா பூரன் சிங் மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் பங்கேற்று பார்வையாளர்களைக் கவர்ந்தனர். மேலும், கார்கில் போரின்போது இந்திய விமானப்படையின் துணிச்சல், மன உறுதி மற்றும் வீரத்தை சித்தரிக்கும் நெட்ஃபிக்ஸ் தொடரான "ஆபரேஷன் சஃபேத் சாகர்") குறித்த முன்னோட்டமும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இந்த மாரத்தான், பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஃபிளையிங் ஆபிஸர் நிர்மல் ஜித் சிங் செகோன் அவர்களின் வீரத்திற்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக அமைந்தது. இது அவரது பாரம்பரியத்தைக் கௌரவிப்பதுடன், அவரது துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பின்பற்றுவதற்கு அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கமளித்தது. பலம், ஒற்றுமை மற்றும் தேசியப் பெருமையின் ஒளிரும் சின்னமாகத் திகழும் இந்திய விமானப்படையின் உறுதியான உணர்வைக் கொண்டாடும் நாளாக இது அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185553
***
AD/VK/RJ
(Release ID: 2185631)
Visitor Counter : 9