சுரங்கங்கள் அமைச்சகம்
தேசிய அரியவகைக் கனிமவள இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு சீர்மிகு மையங்களுக்கு மத்திய சுரங்க அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
25 OCT 2025 11:03AM by PIB Chennai
அரியவகைக் கனிமவள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தேசிய அரியவகைக் கனிமவள இயக்கத்தின் கீழ் சீர்மிகு மையங்களாக ஏற்கனவே அங்கீகரிக்கபட்டுள்ள 7 நிறுவனங்களைத் தவிர, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மின்னணு தொழில்நுட்பத்திற்கான மூலப்பொருள் மையம் (சி-எம்இடி) ஆகிய 2 நிறுவனங்களுக்கு மத்திய சுரங்க அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. திட்ட ஒப்புதல் மற்றும் ஆலோசனைக் குழு வழங்கிய ஒப்புதலையடுத்து, மத்திய சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு பியூஷ் கோயல், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் ஆகியோரின் தலைமையில் 24.10.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கூடுதலாக, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், பாதுகாப்பு, விண்வெளி போன்ற உத்திசார் துறைகளுக்கு, அதிகரித்து வரும் தூய்மை எரிசக்தி மற்றும் மாற்றத்திற்கான நடைமுறைகளுக்கான அத்தியாவசிய மூலப்பொருட்கள் கிடைப்பதற்குத் தேவையான விநியோகச் சங்கிலியை உருவாக்க இது வகை செய்கிறது. முழுமையான அமைப்புமுறை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும், உயர் தொழில்நுட்பத் தயார்நிலையில் உள்ள 7/8 சோதனை அடிப்படையிலான ஆலைகளை நிறுவதற்கும், வர்த்தகத்திற்கு முந்தைய நிலையிலான செயல்பாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகிறது. அரியவகைக் கனிம வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்த சீர்மிகு மையங்கள் புதுமையான மற்றும் மாற்றத்தக்க ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு சீர்மிகு மையமும் ஒரு கூட்டமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாதிரி அமைப்பாக செயல்படுவதுடன், அரியவகைக் கனிம வளங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு, ஒவ்வொரு தொகுதியின் முக்கிய திறனையும் ஒரே குடையின் கீழ் இணைக்கவும் உதவிடும். ஒருங்கிணைக்கப்பட்ட சீர்மிகு மையங்களின் வழிகாட்டுதல்களின்படி, இந்தக் கூட்டமைப்பில் குறைந்தது இரண்டு தொழில்துறை நிறுவனங்களையும் இணைத்து, குறைந்தது இரண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / கல்வி நிறுவனங்களையும் இந்த அமைப்பிற்கு கொண்டு வருவது கட்டாயமாகும். 9 அங்கீகரிக்கப்பட்ட சீர்மிகு மையங்கள் இணைந்து 90 தொழில்துறை நிறுவனங்கள், கல்வி / ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்புகளையும் கொண்டு வந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182381
***
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2182445)
आगंतुक पटल : 29