பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா எந்த சவாலுக்கும் பதிலளிக்க எப்போதும் தயாராக உள்ளது என்ற உலகளாவிய செய்தியை ஆபரேஷன் சிந்தூர் பறைசாற்றியது: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
23 OCT 2025 5:42PM by PIB Chennai
"இந்தியாவின் மன உறுதி மற்றும் திறனின் அடையாளமாக விளங்கிய ஆபரேஷன் சிந்தூர், ஒவ்வொரு சவாலுக்கும் பதிலளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை உலகிற்கு பறைசாற்றிய ஒரு செய்தியாகவும் இருந்தது" என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அக்டோபர் 23, 2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், பாகிஸ்தானை துறைமுகத்தில் அல்லது அதன் கடற்கரையில் நிற்கச் செய்த ஒரு தடுப்பு நிலைப்பாட்டை உருவாக்கியதற்காக இந்திய கடற்படையைப் பாராட்டினார். இந்த ஆபரேஷனின் போது கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, தொழில்முறை திறன் மற்றும் வலிமையை உலகம் கண்டதாக அமைச்சர் கூறினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் செயல்பாட்டை "நட்பு நாடுகளுக்கு வசதியானது" என்றும், "பிராந்தியத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு அசௌகரியமானது" என்றும் அவர் விவரித்தார்.
தன்னிறைவு கொண்ட கடற்படையை தன்னம்பிக்கை மற்றும் சக்திவாய்ந்த தேசத்தின் அடித்தளமாகக் குறிப்பிட்ட அமைச்சர், உள்நாட்டு உபகரணங்கள் மூலம் அதன் திறன்களை மேம்படுத்தி, தற்சார்பு இந்தியாவை முன்னெடுத்ததற்காக இந்திய கடற்படையைப் பாராட்டினார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை பாதுகாப்பு உற்பத்தியில் மட்டுமின்றி, தேச கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். “இன்று நமது கடற்படை நாட்டின் தன்னிறைவு, புதுமை மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் முன்னோடியாக மாறியுள்ளது. ஒவ்வொரு கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் உள்நாட்டில் கட்டப்படுவதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு இயந்திரத்துடன் ஒரு புதிய திறன் உருவாக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு உள்நாட்டு அமைப்புமுறையுடனும், இந்தியாவின் சார்புநிலை குறைந்து வருகிறது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்ட திட்டம் 17ஏ கப்பல்கள், எம்டிஎல் மற்றும் ஜிஆர்எஸ்இ போன்ற கப்பல் கட்டும் தளங்களில் சுமார் 1.27 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு கடற்படைத் திட்டமும் பாதுகாப்புடன், பொருளாதாரம் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது சான்றாகும்”என்று அவர் கூறினார்.
"கடற்படை தனது விமானப் போக்குவரத்துத் துறையில் தன்னிறைவை நோக்கி பல புதுமைகளைச் செய்துள்ளது. பல்துறை கடல்சார் உளவு விமானங்கள், பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், இரட்டை எஞ்சின் டெக் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல் மூலம் இயக்கப்படும் ஆளில்லா வான்வழி அமைப்புமுறைகள் போன்ற திட்டங்கள் நமது உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு புதிய வழியைக் காட்டுகின்றன. இது முக்கியமான திறன் இடைவெளிகளை நிரப்புவது மட்டுமல்லாமல், தன்னிறைவையும் வலுப்படுத்துகிறது" என்று அவர் மேலும் கூறினார். இன்றைய போர்களை எதிர்த்துப் போராட உத்திகளை வகுப்பதற்கும், அதிநவீன உபகரணங்களைப் பெறுவதற்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறைச் செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி. காமத் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181897
(Release ID: 2181897)
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2181990)
आगंतुक पटल : 23