தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி அலைவரிசைகளில் கட்டணமின்றி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியுள்ளது

Posted On: 16 OCT 2025 10:21AM by PIB Chennai

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேரத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி கட்டணமின்றி பிரச்சாரம் மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இணையதளம் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஏதுவாக தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரம் குறித்த தகவல்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படவுள்ளது.

பீகாரில்  ஒவ்வொரு கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட தேதி முதல் வாக்குப்பதிவு தினத்திற்கு இரண்டு நாள் முன்னதாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கான நேர ஒதுக்கீடு பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அனுமதி பெற்ற பிரதிநிதிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

இந்த முறையின் கீழ் கட்டணமின்றி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரே மாதிரியாக  45 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அந்தந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் செயல்பாடுகள் அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் குறித்த உரைகள் மற்றும் ஒலி-ஒளி பதிவுகளை அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி பிரச்சார நாளுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். பிரசார் பாரதி அல்லது தூர்தர்ஷன் / அகில இந்திய வானொலி நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட நிலையான தொழில்நுட்ப அடிப்படையில் பிரச்சாரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கூடுதலாக, பீகார் தேர்தலுக்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரசார் பாரதி நிறுவனத்தால்  இரண்டு குழு விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு தகுதி வாய்ந்த அரசியல் கட்சியும் ஒரு பிரதிநிதியை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தந்த அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் பரிந்துரைக்க வேண்டும்.

***

(Release ID: 2179720)

SS/SV/AG/SH


(Release ID: 2179814) Visitor Counter : 16