பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025-ல் பிரதமர் உரையாற்றினார்

ஜனநாயக உணர்வை, தனது ஆளுகையின் வலிமையான தூணாக இந்தியா மாற்றி உள்ளது: பிரதமர்
இந்தியாவின் நிதிநுட்ப சமூகத்தின் முயற்சிகளால் எங்களது சுதேசி தீர்வுகள் உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன: பிரதமர்
மக்களையும், பூமியையும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நிதிநுட்ப உலகை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்: பிரதமர்

Posted On: 09 OCT 2025 5:38PM by PIB Chennai

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025ல் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு திருவிழாவில் கூட்டு நாடக இங்கிலாந்து பங்கேற்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இரண்டு முக்கிய ஜனநாயகங்களுக்கு இடையேயான கூட்டுமுயற்சி, உலகளாவிய நிதி சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். “இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை, இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல்கள் அல்லது கொள்கை வடிவமைப்புடன் மட்டுப்படுவதில்லை, மாறாக ஆளுகையின் வலிமையான தூணாக உருவாகி இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா ஜனநாயகமையமாக்கி இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இதன் காரணமாக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு பகுதியும் இதை அணுக முடியும் என்றும் நாட்டின் சிறந்த ஆளுகையின் மாதிரியாக தற்போது இது உருவெடுத்துள்ளது என்றும் கூறினார். வசதிக்கான கருவியாக மட்டுமல்லாமல், சமத்துவத்திற்கான பாதையாகவும் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படலாம் என்பதை இந்தியா உணர்த்தி உள்ளது என்று திரு மோடி  குறிப்பிட்டார்.

இந்திய நிதிநுட்ப சமூகத்தின் முயற்சிகள் உலக அளவில் உள்நாட்டுத் தீர்வுகளை வழங்கியுள்ளன என்று கூறிய பிரதமர், ஒன்றோடொன்று இயங்கக்கூடிய கியூ ஆர் வலையமைப்புகள், திறந்த வர்த்தகம் மற்றும் திறந்த நிதி கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்திய புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது, என்று தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா, சர்வதேச அளவில் அதிக நிதி அளிக்கப்பட்ட முதல் மூன்றாவது நிதிநுட்ப சூழலியல்களுள்  ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தரவு, திறன்கள் மற்றும் ஆளுகையில் கூட்டு முதலீட்டிற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

“செயற்கை நுண்ணறிவை நோக்கிய இந்தியாவின் அணுகுமுறை, சமமான அணுகல், மக்கள்தொகை அளவிலான திறன் மேம்பாடு மற்றும் பொறுப்பான பயன்பாடு ஆகிய மூன்று முக்கிய கொள்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது”, என்று கூறிய பிரதமர், செயற்கை நுண்ணறிவின் பயன்களை ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்து வளருமாறு  ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். மக்களையும், பூமியையும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நிதிநுட்ப உலகை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176893

(Release ID: 2176893)

***

SS/BR/SH


(Release ID: 2177093) Visitor Counter : 28