மக்களவை செயலகம்
68-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழு மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்கிறது
Posted On:
05 OCT 2025 5:10PM by PIB Chennai
திரு. ஓம் பிர்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு, 2025 அக்டோபர் 5 முதல் 12 வரை பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் நடைபெறவுள்ள 68வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது. இந்திய குழுவில் மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ்; மக்களவை உறுப்பினர் மற்றும் காமன்வெல்த் நாடாளுமன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. அனுராக் சர்மா; மக்களவை உறுப்பினர் மற்றும் காமன்வெல்த் மகளிர் நாடாளுமன்ற வழிகாட்டு குழு உறுப்பினர் டாக்டர். டி. புரந்தேஸ்வரி; மக்களவை உறுப்பினர் டாக்டர். கே. சுதாகர்; மாநிலங்களவை உறுப்பினர் திருமதி ரேகா சர்மா; மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். அஜீத் மாதவ்ராவ்; மக்களவை செயலாளர் திரு. உத்பால் குமார் சிங் மற்றும் மாநிலங்களவை செயலாளர் திரு. பி.சி. மோடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வருடாந்திர மாநாட்டில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களைச் சேர்ந்த 36 தலைமை அதிகாரிகள் மற்றும் 16 செயலாளர்களும் கலந்து கொள்வார்கள், அவர்களும் காமன்வெல்த் நாடாளுமன்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
மக்களவைத் தலைவர் இந்த மாநாட்டின் பொதுச் சபையில் "காமன்வெல்த்- உலகளாவிய பங்குதாரர்" என்ற தலைப்பில் உரையாற்றுவார். மாநாட்டின் போது, பல்வேறு தலைப்புகளில் ஏழு பட்டறைகள் நடைபெறும். மாநாட்டின்போது நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் திரு. அனுராக் சர்மா பொருளாளராக கலந்து கொள்வார், மேலும் அஸ்ஸாம் சட்டமன்ற சபாநாயகர் திரு. பிஷ்வஜித் டைமாரியும் கலந்துகொள்வார், அவர் காமன்வெல்த் நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் இந்திய மாநிலங்களின் பிரதிநிதியாக உள்ளார்.
மக்களவை உறுப்பினர் டாக்டர். டி. புரந்தேஸ்வரி, "காமன்வெல்த் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழிகாட்டும் கூட்டத்தில்" கலந்துகொள்வார். "காமன்வெல்த் முழுவதும் பாலின வேறுபாடுகளை களைந்து உள்ளடக்கிய நாடாளுமன்றங்களை நனவாக்குவதற்கான நல்ல நடைமுறைகள் மற்றும் உத்திகள் " என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டு அமர்வில் அவர் குழு உறுப்பினராகவும் பங்கேற்பார்.
மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் தலைமை அதிகாரிகள் உள்பட குழுவின் மற்ற உறுப்பினர்களும் பல்வேறு பட்டறைகள் மற்றும் மாநாட்டின் பொதுச்சபையில் பங்கேற்பார்கள்.
இந்த பயணத்தின் போது, மாண்புமிகு மக்களவைத் தலைவர் பரஸ்பர நலன்கள் மற்றும் நாடாளுமன்ற ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க மற்ற காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.
பார்படோஸில் தங்கியிருக்கும் போது, மக்களவைத் தலைவர் பார்படோஸின் அரசு நிர்வாக தலைமையை சந்திப்பதோடு இந்திய வம்சாவளியினரையும் தொடர்பு கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175055
***
AD/VK/RJ
(Release ID: 2175142)
Visitor Counter : 5