உள்துறை அமைச்சகம்
காதி மூலம் கிடைக்கும் லாபம் நேரடியாக நாட்டின் நெசவாளர்களுக்குச் சென்று பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
03 OCT 2025 6:40PM by PIB Chennai
ஹரியாணா மாநிலம் ரோஹ்தக்கில் இன்று நடைபெற்ற காதி கரிகர் மஹோத்சவத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் திரு. நயாப் சிங் சைனி, மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு. கிருஷ்ணன் பால் குர்ஜார், மத்திய அமைச்சர் திரு. ராவ் இந்தர்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சுதந்திரப் போராட்டத்தின் போது, வறுமையை ஒழிக்கவும், நாட்டைத் தன்னிறைவடையச் செய்யவும், சுதேசி என்ற கருத்தை ஊக்குவிக்கவும், விடுதலை அடையவும் மகாத்மா காந்தி காதியைப் பயன்படுத்தினார் என்று கூறினார். நாடு முழுவதும் உள்ள லட்சக் கணக்கான நெசவாளர்களின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய காதி என்ற தாரகமந்திரம், நமது நாட்டு மக்களுக்கும் சுதந்திர இயக்கத்திற்கும் ஒரு அடித்தளமாக மாறியது என்று அவர் தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, காதியை மீண்டும் உயிர்ப்பிக்கத் தீர்மானித்தார், என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமரான பிறகு, திரு மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் காதியைப் பயன்படுத்துமாறு நாட்டு மக்களை ஊக்குவித்தார். 2014-15 ஆம் ஆண்டில், 33,000 கோடி ரூபாயாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்களின் வருவாய், இப்போது 1.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். காதியின் முழு வருவாயும் நாட்டின் நெசவாளர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது, என்றார் அவர். நவீன காலத்திற்கு ஏற்ப காதி குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது என்றும், சிறந்த பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஏற்பாடுகளுடன், மக்கள் அதைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் திரு ஷா கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 11 ஆண்டுகளில் காதியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருந்தால், நம் நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஒருபோதும் எழுந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு மோடி சமீபத்தில் நாட்டு மக்களை உள்நாட்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தியதை அமைச்சர் அடிகோடிட்டுக் காட்டினார். நாடு முழுவதும் உள்ள பல வர்த்தகர்கள் தங்கள் கடைகளில் வெளிநாட்டு பொருட்களை வைத்திருக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளதாக திரு ஷா குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கான சுதேசியின் இந்த முழக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார். 2047-ம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு மோடி திட்டமிட்டிருப்பதாகவும், இந்த தொலைநோக்குப் பார்வையில் சுதேசி மற்றும் காதி பிரச்சாரம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174571
(Release ID: 2174571)
***
AD/BR/SH
(Release ID: 2174663)
Visitor Counter : 23