கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் கட்டுதலில் தன்னிறைவை ஊக்குவிக்க தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுடன் ₹ 66,000 கோடி முதலீட்டில் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
Posted On:
28 SEP 2025 7:42PM by PIB Chennai
இந்திய கடல்சார் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்களிடையே 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சேர்ந்து சுமார் ₹66,000 கோடி முதலீடு மற்றும் மேம்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளன. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கப்பல் கட்டும் தொகுப்புகளை நிர்மாணிப்பதற்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை மத்திய மற்றும் மாநிலங்களின் கூட்டு முதலீடுகளுடன் கூடிய சிறப்பு நோக்க நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும். ஏற்கக்கூடிய செலவில் நில பரிமாற்றம், வரி சலுகைகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றால் இவை ஆதரிக்கப்படும். ஒவ்வொரு தொகுப்பும் அதிநவீன கப்பல் கட்டும் தளங்களுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், சிறு தொழில் இணைப்புகள், துணை அலகுகள், சிறப்பு பயிற்சி வசதிகள் மற்றும் தளவாட வழித்தடங்களையும் கொண்டிருக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் ஐந்து உலகளாவிய கப்பல் கட்டும் நாடுகளில் இந்தியாவை நிலைநிறுத்துவதே இந்த முயற்சியின் இலக்காகும்.
தமிழ்நாட்டில் ₹15,000 கோடி மதிப்புள்ள கப்பல் கட்டும் வளாகத்தை உருவாக்குவதற்காக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம், சிப்காட் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த வளாகம் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மொத்த கொள்ளளவு கொண்ட கப்பல்களை உற்பத்தி செய்யும் தனித்துவமான திறனைக் கொண்டிருக்கும். மேலும் சுமார் 8,000 பேருக்கு நேரடியாகவும் 40,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கும். இதேபோல், தூத்துக்குடியில் மற்றொரு பெரிய பசுமை வளாகத்தை அமைக்க மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172488
***
SS/RB/RJ
(Release ID: 2172580)
Visitor Counter : 7