வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நியாயமான, வெளிப்படையான வர்த்தக சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் - எஸ்சிஓ வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
Posted On:
07 SEP 2025 11:51AM by PIB Chennai
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நேற்று (செப்டம்பர் 06, 2025) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில், கூட்டு செயல்பாட்டுக்கான வாய்ப்பை இந்தியா வலியுறுத்தியது. மேலும் ஏற்றுமதியைப் பல்வகைப்படுத்தல், சார்புநிலையைக் குறைத்தல், வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் அவசியத்தையும் இந்தியா எடுத்துரைத்தது. எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகளில் உலக மக்கள்தொகையில் 42% மக்கள் உள்ளனர். உலக வர்த்தகத்தில் 17.2% வர்த்தகத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. இந்நிலையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், பாதிப்புகளைக் களையவும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது.
மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சார்பில் இக்கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு அமிதாப் குமார், உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு வெளிப்படையான, நியாயமான, பாகுபாடற்ற பலதரப்பு வர்த்தக சூழலின் அவசியத்தை சுட்டிக் காட்டினார். உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் குரு சிறு நடுத்தர நிறுவனங்களின் அதிக பங்கேற்பை ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தில், நியாயமான, வெளிப்படையான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், சிறந்த நடைமுறைகளில் ஒத்துழைப்பு, பாதுகாப்பான, புதுமை சார்ந்த டிஜிட்டல்மயமாக்கல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா ஆலோசனை தெரிவித்தது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான யுபிஐ, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்றவற்றில் இந்தியாவின் சாதனைகள் இந்திய தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த முயற்சிகள் வணிகத்தில் செலவுகளைக் குறைப்பதற்கும், சந்தைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உதவியுள்ளதாக இந்தியா கூறியது.
மும்பையில் உலக ஒலி, ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES 2025) வெற்றிகரமாக நடத்தியது குறித்து இந்திய தரப்பில் விளக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா தன்னை ஒரு உலகளாவிய திரைப்பட தயாரிப்பு மையமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என இந்திய தரப்பில் பேசிய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.
ஒரு பெரிய, பல்துறை வர்த்தக செயல்திட்ட நிகழ்ச்சியை வழிநடத்தியதற்காக எஸ்சிஓ-விக்கு இந்தியா நன்றி தெரிவித்தது. நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பதற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதி செய்தது.
***
(Release ID: 2164461)
AD/PLM/SG
(Release ID: 2164499)
Visitor Counter : 2