மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளத் துறை சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமை வகித்தார்

மீன்வளத்துறையில் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க மீன் உற்பத்தித் திறனை அதிகரிப்பது அவசியம்: திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

Posted On: 06 SEP 2025 6:15PM by PIB Chennai

மீன்வளத்துறையில் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்க, மத்திய மீன்வள அமைச்சகத்தின் சார்பில், இத்துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (06.09.2025) நேரடியாகவும் காணொளி வழியாகவும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் சிங் தலைமை வகித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மீன்வளத் துறையில் உற்பத்தி, உற்பத்தித்திறன், ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சவால்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதுமீன்வளத் துறை செயலாளர் திரு அபிலக்ஷ் லிக்கி ஆலோசனை, கருத்துப் பகிர்வு அமர்வை வழிநடத்தினார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மீன்வளத் துறையின் உற்பத்தி, உற்பத்தித்திறன், ஏற்றுமதி ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சீர்திருத்த செயல் திட்டத்தைத் தயாரிப்பதில் இத்துறைப் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் அவசியம் என்று கூறினார். இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தத் துறையின் போட்டித்தன்மையை அதிகரிப்பதில் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

 

ஏற்றுமதி சந்தையை பல்வகைப்படுத்தல், மீன் பதப்படுத்துதலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, குளிர்பதனச் சங்கிலி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பதப்படுத்தும் திறன்களை மேம்படுத்துதல், உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். மீன்வளத் துறை நாட்டில் 8 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் அளிக்கிறது என்று அவர் கூறினார். இந்தத் துறையின் கட்டமைப்பு மாற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை திரு ராஜீவ் ரஞ்சன் சிங் எடுத்துரைத்தார்.

மீன்வளத் துறையின் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தமது உரையில், மீன்வளத் துறையின் ஏற்றுமதி திறனை எடுத்துரைத்து, அதன் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மீனவர் சங்கங்கள், ஏற்றுமதியாளர்கள், மீன் வளம் சார்ந்த தொழில்துறை அமைப்புகள் ஆகியவை நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளத் துறை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய மீன்வள ஆய்வு மையம், மீனவர் சங்கங்கள், தொழில்துறை அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

****

 

(Release ID: 2164386)

AD/PLM/SG

 

 


(Release ID: 2164417) Visitor Counter : 2