நிதி அமைச்சகம்
சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி விகிதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரை: ஜிஎஸ்டி கவுன்சில்
Posted On:
03 SEP 2025 10:39PM by PIB Chennai
தனிநபர், சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் பயனடையும் வகையில், சரக்கு மற்றும் சேவைகள்மீதான வரிவிகிதத்தைக் குறைப்பது என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. புதுதில்லியில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் இம்மாதம் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், இழப்பீட்டுத் தீர்வையின் கீழ், வழங்கப்பட வேண்டிய நிதித்தேவைகைளைக் கருத்தில் கொண்டு இந்த வரி விகிதங்கள் படிப்படியாக அமல்படுத்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இதன்படி,
சேவைகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் இம்மாதம் 22-ம் தேதி அமலுக்கு வருகிறது.
பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் தவிர அனைத்துப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி விகிதங்கள் இந்த மாதம் 22-ம் தேதி அமலுக்கு வருகிறது.
பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரி விகிதங்கள் இழப்பீட்டுத் தீர்வைகள் கடன் மற்றும் வட்டி தொடர்பான நிலுவைத் தொகைகள் முழுமையாக விடுவிக்கும் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேற்கூறிய இழப்பீட்டுத் தொகைகள் குறித்த மாற்றியமைக்கப்பட்ட வரி விகிதங்கள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஜிஎஸ்டி சட்டம் மற்றும் நடைமுறைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, மக்களை மையமாகக் கொண்ட வரி சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், குடிமக்களுக்கு வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் ஜிஎஸ்டி வரிமுறைகளில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்த நான்கு வரி விகித அடுக்குகள் இரண்டு வரி விகித அடுக்குகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் 5 சதவீதமாகவும், இதரப் பொருட்களுக்கு 18 சதவீதமாகவும் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சில ஆடம்பர வகைப் பொருட்களுக்கான வரி விகிதம் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2163555)
SS/SV/KPG/KR
(Release ID: 2163679)
Visitor Counter : 2