விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான உயர்நிலைக் கூட்டத்தை மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் நடத்தினார்
Posted On:
01 SEP 2025 6:20PM by PIB Chennai
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் புகார்களைத் தீர்ப்பது குறித்து மறுஆய்வு செய்வதற்காக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று தில்லியில் ஒரு உயர்நிலைக் கூட்டத்தை நடத்தினார். விவசாயிகளின் வசதிக்காகவும், பிரச்சினைகளுக்கு விரைவாக சரியான தீர்வு காண்பதை உறுதி செய்வதற்கும், பல தளங்களுக்குப் பதிலாக விவசாயிகளின் புகார்கள், பரிந்துரைகள் மற்றும் பிற உதவிகளுக்கு ஒரே ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்குமாறு கூட்டத்தில், அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் புகார்களை தாமே தொடர்ந்து மதிப்பாய்வு செய்வார் என்றும், இதனால் அவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்றும் திரு சவுகான் கூறினார்.
புகார்கள் மற்றும் உதவி எண்கள் மூலம் பெறப்படும் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எந்த தாமதமும் இருக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் நலன்களுக்காக அனைத்து அதிகாரிகளும் முழுமையான வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் உணர்திறன் ஆகியவற்றுடன் பணியாற்ற வேண்டும் என்றும், அமைப்புமுறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் திரு சிவராஜ் சிங் கூறினார். விவசாயிகளின் புகார்களுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள தீர்வு கிடைப்பதை இந்த வழிமுறை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் நமது விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்வதே நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உயிரி ஊக்கிகள் (பயோ ஸ்டிமுலண்ட்கள்) சட்டவிரோதமாக விற்கப்பட்டதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், அறிவிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், முழுமையான இணக்கத்தை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இதுவரை அறிவிக்கப்பட்ட 146 உயிரி ஊக்கிகளைத் தவிர, வேறு எதன் விற்பனையும் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அதே நேரத்தில், அறிவிக்கப்பட்ட உயிரி ஊக்கிகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பட்டியலை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பவும் மத்திய அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 'உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம்' என்ற அழைப்புக்கும், மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்கும் வகையிலும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அதிகாரிகள், உள்நாட்டுப் பொருட்களை பெருமளவில் வாங்குவதற்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர். மத்திய அமைச்சருடன் இணைந்து, வேளாண்மைச் செயலாளர் டாக்டர். தேவேஷ் சதுர்வேதி மற்றும் அதிகாரிகளும் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162799
----
SS/RB/DL
(Release ID: 2162940)
Visitor Counter : 2