பிரதமர் அலுவலகம்
ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
30 AUG 2025 10:46AM by PIB Chennai
வணக்கம்
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.
இந்த அறையில் ஜப்பான் தொழில் துறையின் பாரம்பரியத்தை என்னால் உணர முடிகிறது. நீங்கள் ஜப்பானை காலத்தால் அழியாததாக ஆக்குகிறீர்கள்.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஆழமான பிணைப்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானவை. புத்தரின் இரக்கத்தால் நாம் இணைக்கப்பட்டுள்ளோம்.
எனது சொந்த மாநிலமான குஜராத்திலிருந்து வைர வியாபாரிகள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோபிக்கு வந்தனர். ஹமா-மாட்சுவின் நிறுவனம் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இரு நாடுகளின் இந்த தொழில்முனைவோர் உணர்வு நம்மை இணைக்கிறது.
இது போன்ற பல கதைகள், பல உறவுகள், இந்தியாவையும் ஜப்பானையும் நெருக்கமாக இணைக்கின்றன. இப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா, பாதுகாப்பு, திறன், கலாச்சாரத் துறைகளில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படுகின்றன. இந்த உறவு டோக்கியோ அல்லது தில்லியில் அரசு நிலைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்த உறவு இந்தியா - ஜப்பான் மக்களின் எண்ணங்களில் வாழ்கிறது.
மதிப்பிற்குரியவர்களே,
பிரதமராவதற்கு முன்பு, நான் சுமார் பதினைந்து ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக பணியாற்றினேன். அந்த நேரத்தில், ஜப்பானுக்குப் பயணிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. எங்கள் மாநிலங்களிலும் உங்கள் மாகாணங்களிலும் உள்ள சாத்தியக்கூறுகளை நான் கண்டேன்.
கொள்கை சார்ந்த நிர்வாகம், தொழில்துறையை மேம்படுத்துதல், வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் எனது கவனம் உள்ளது. இன்று, இது 'குஜராத் மாதிரி' என்றும் அழைக்கப்படுகிறது.
2014-ல், பிரதமரான பிறகு, நான் இந்த சிந்தனையை தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றினேன். எங்கள் மாநிலங்களில் போட்டி மனப்பான்மையை மீண்டும் புதுப்பித்தோம். அவற்றை தேசிய வளர்ச்சிக்கான தளமாக மாற்றினோம். ஜப்பானின் மாகாணங்களைப் போலவே, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த அடையாளம், அதன் சொந்த சிறப்பு உள்ளது. அவற்றின் பகுதிகள் வேறுபட்டவை. சில கடற்கரையோரப் பகுதிகள், மற்றவை மலைகளின் மடியில் அமைந்துள்ளன.
நமது பன்முகத்தன்மையை நல்ல விளைவுகளாக மாற்ற நாங்கள் பணியாற்றியுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் அடையாளத்தையும் உயர்த்துவதற்காக, "ஒரு மாவட்டம் - ஒரு தயாரிப்பு" இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். வளர்ச்சியடையாத மாவட்டங்கள், வட்டாரங்களுக்கு, நாங்கள் லட்சிய மாவட்டம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். தொலைதூர எல்லை கிராமங்களை பிரதான நீரோட்டத்துடன் இணைக்க, நாங்கள் துடிப்பான கிராமங்கள் திட்டத்தைத் தொடங்கினோம். இன்று, இந்த மாவட்டங்களும் கிராமங்களும் தேசிய வளர்ச்சியின் புதிய மையங்களாக உருவாகி வருகின்றன.
மதிப்பிற்குரிய மாகாண ஆளுநர்களே,
உங்கள் மாகாணங்கள் தொழில்நுட்பம், உற்பத்தி, புதுமையின் உண்மையான சக்தி மையங்கள். அவற்றில் சில பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் நீங்கள் பெரிய பொறுப்பை சுமக்கிறீர்கள் என்பதாகும்.
சர்வதேச ஒத்துழைப்பின் எதிர்காலம் உங்கள் முயற்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல இந்திய மாநிலங்களும் ஜப்பானிய மாகாணங்களும் ஏற்கனவே ஒத்துழைப்புகளைக் கொண்டுள்ளன, அதாவது:
குஜராத் - ஷிசுவோகா,
உத்தரபிரதேசம் - யமனாஷி,
மகாராஷ்டிரா - வகயாமா,
ஆந்திரப் பிரதேசம் - டோயாமா.
இருப்பினும், இந்த ஒத்துழைப்பு காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். இது காகிதத்திலிருந்து மக்களின் செழிப்புக்குச் செல்ல வேண்டும்.
இந்திய மாநிலங்கள் சர்வதேச ஒத்துழைப்பின் மையங்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் பிரதமர் திரு இஷிபாவும் நானும் நேற்று மாநில - மாகாண கூட்டு முயற்சியை தொடங்கினோம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று இந்திய மாநிலங்கள், ஜப்பானின் மூன்று மாகாணங்களின் பிரதிநிதிகள் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கும் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கும் செல்ல வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். இந்த முயற்சியில் பங்கேற்கவும், இந்தியாவுக்கு வருகை தரவும் உங்கள் அனைவரையும் நான் அன்புடன் அழைக்கிறேன்.
இந்தியாவின் மாநிலங்களும் ஜப்பானின் மாகாணங்களும் எங்கள் பகிரப்பட்ட முன்னேற்றத்தை இணைந்து வழிநடத்தட்டும்.
உங்கள் மாகாணம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, குறு, சிறு, நிறுனங்களுக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் வளமான இடத்தை இது வழங்குகிறது. இதேபோல், இந்தியாவில், சிறிய நகரங்களைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களும் குறு, சிறு, நிறுவனங்களும் நாட்டின் வளர்ச்சிக் கதையை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜப்பான் - இந்தியா நாடுகளின் துடிப்பான சூழல் அமைப்புகள் ஒன்றிணைந்தால் -
யோசனைகள் அதிகரிக்கும்,
புதுமை வளரும்,
வாய்ப்புகள் விரிவடையும்!
இந்த சிந்தனையை மனதில் கொண்டு, கன்சாயில் ஒரு வணிக பரிமாற்ற மன்றம் தொடங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நிறுவனங்களுக்கு இடையே நேரடி தொடர்பை உருவாக்ககிப், புதிய முதலீடுகளைக் கொண்டு வந்து, புத்தொழில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும். மேலும் திறமையான நிபுணர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.
மதிப்பிற்குரியவர்களே,
இளம் மனங்கள் இணையும்போது, சிறந்த நாடுகள் ஒன்றிணைகின்றன.
ஜப்பானின் பல்கலைக்கழகங்கள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு படிக்கவும், கற்றுக்கொள்ளவும், பங்களிக்கவும் அதிகமான இந்திய மாணவர்களை ஊக்குவிக்க, பிரதமர் திரு இஷிபாவுடன் இணைந்து ஒரு செயல் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் பரிமாற்றத் திட்டங்களில் 5 லட்சம் நபர்கள் பங்கேற்பார்கள். இது தவிர, 50,000 திறமையான இந்திய வல்லுநர்கள் ஜப்பானுக்கு வருவார்கள். ஜப்பானின் மாகாணங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முயற்சியில் உங்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
மதிப்பிற்குரியவர்களே,
நமது நாடுகள் ஒன்றிணைந்து முன்னேறும்போது, ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு இந்திய மாநிலமும் புதிய தொழில்களை உருவாக்கி, புதிய திறன்களை வளர்த்து, அதன் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
டோக்கியோவும் தில்லியும் முன்னிலை வகிக்கட்டும். ஆனால்,
கனகாவாவும் கர்நாடகாவும் குரல் கொடுக்கட்டும்.
ஐச்சியும் அசாமும் ஒன்றாக கனவு காணட்டும்.
ஒகயாமாவும் ஒடிசாவும் எதிர்காலத்தை உருவாக்கட்டும்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 2162136)
AD/PLM/RJ
(Release ID: 2162275)
Visitor Counter : 19
Read this release in:
English
,
हिन्दी
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam