பாதுகாப்பு அமைச்சகம்
ககன்யான் பயணம் மேற்கொள்வோரை கௌரவித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர்
இந்தியா விண்வெளித் துறையை ஆராய்ச்சிக்கான ஒரு துறையாக மட்டும் பார்க்கவில்லை - மனிதகுலத்தின் எதிர்காலமாகவும் பார்க்கிறது : பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
24 AUG 2025 1:25PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஆகஸ்ட் 24) புதுதில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, இஸ்ரோவின் முதல் விண்வெளிப் பயணமான ககன்யானில் பங்கேற்கவுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பி.பி. நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோரைப் பாராட்டி கௌரவித்தார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களையும் நாட்டின் ரத்தினங்கள் என்றும், தேசிய லட்சியங்களின் முன்னோடிகள் என்றும் கூறினார்.
விண்வெளியில் இந்தியாவின் விரிவடைந்து வரும் திறனை எடுத்துரைத்த திரு ராஜ்நாத் சிங், இந்தியா விண்வெளியை ஆராய்ச்சிக்கான ஒரு துறையாக மட்டும் பார்க்கவில்லை என்றார். நாளைய பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, ஒட்முமொத்த மனிதகுலத்தின் எதிர்காலம் என அனைத்துமாக அதை இந்தியா பார்க்கிறது என அவர் குறிப்பிட்டார். பூமியின் மேற்பரப்பைத் தாண்டி விண்வெளியின் புதிய எல்லைகளுக்குள் நாம் சீராக முன்னேறி வருவதாக அவர் கூறினார். சந்திரனில் இருந்து செவ்வாய் வரை நமது இருப்பையும் ஆய்வுகளையும் நாம் ஏற்கெனவே விரிவுபடுத்தியுள்ளோம் என்றும், இப்போது ககன்யான் போன்ற திட்டங்களுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவுத்தார்.
இந்த சாதனை வெறும் தொழில்நுட்ப மைல்கல் மட்டுமல்ல எனவும் தற்சார்பு பாரதத்தில் இது ஒரு புதிய அத்தியாயம் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார் . உலகின் முன்னணி விண்வெளி சக்திகளில் ஒன்றாக இந்தியா பெருமையுடன் உயர்ந்து நிற்கிறது என அவர் கூறினார். இந்தியாவின் விண்வெளித் திட்டம் ஆய்வகங்கள், ஏவுதள வாகனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை எனவும் இது நமது தேசிய விருப்பங்கள், உலகளாவிய பார்வை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். சந்திரயான் முதல் மங்கள்யான் வரை, மன உறுதியால் மிகவும் சவாலான இலக்குகளை குறிப்பிடத்தக்க சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்று திரு ராஜ்நாத் சங் கூறினார்.
குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தைப் அவர் பாராட்டினார். அவரது அசாதாரண சாதனை வெறும் தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை எனவும் அர்ப்பணிப்பின் செய்தி என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தப் பாராட்டு விழாவில் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2160283)
AD/PLM/RJ
(Release ID: 2160331)