தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Posted On: 23 AUG 2025 2:49PM by PIB Chennai

அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் 800 டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கை அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான அஞ்சல் சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

800 டாலர் வரை மதிப்புள்ள சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கான வரி விலக்கு 2025, ஆகஸ்ட் 29 முதல் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், 100 டாலர் வரையிலான பரிசுப் பொருட்களுக்கு  தொடர்ந்து வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அமெரிக்க அரசின் உத்தரவையடுத்து, அமெரிக்காவிற்குச் செல்லும் விமான நிறுவனங்கள் 2025, ஆகஸ்ட் 25-க்குப் பின்  அஞ்சல் மூலம் சரக்குகளை ஏற்க இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு 2025, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட மதிப்பிலான பொருட்களுக்கான சேவை தொடரும். அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து சூழ்நிலையை அஞ்சல் துறை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் சேவைகளை இயல்பாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களை அனுப்ப ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல் துறை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, அமெரிக்காவிற்கு முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160099  

*******

AD/PKV/SG

 


(Release ID: 2160188) Visitor Counter : 18