பாதுகாப்பு அமைச்சகம்
ஐநா மகளிர் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் பங்கேற்கும் உலக மகளிர் அமைதிப் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்
Posted On:
22 AUG 2025 3:15PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்று வரும் ஐநா மகளிர் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மகளிர் அமைதிப் படை வீரர்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (22.08.2025) கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள மானக்ஷா மையத்தில் நடைபெறும் இந்த இரண்டு வார காலப் பயிற்சியை பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம், 18-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி ஐநா சபையில் மேற்கொள்ளப்படும் பன்முகத் தன்மை கொண்ட நிகழ்வுகளில் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
இந்தப் பயிலரங்கில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஐநா அமைதிப்படை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்தியா பெரும் பங்கு வகித்து வருவதாகவும் பாதுகாப்புப் படையில் மகளிரின் பங்கேற்பு மற்றும் அவர்களது ஒருமைப்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். இந்தப் பயிற்சி ஐநா பாதுகாப்புப் படை சிக்கலான சூழல்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஆயுதப்படைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், வலுவான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், அமைதிப் படைகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு படையை வழிநடத்திச் செல்வதற்கும் சேவையாற்றுவதற்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஐநா மேற்கொள்ளும் பணிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஐநா சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் பங்கேற்பதற்காக துருப்புகளைத் தொடர்ந்து அனுப்பி வரும் நாடுகளிலேயே பாலினப்பாகுபாட்டைக் களையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும அவர் தெரிவித்தார்.
இந்த இரண்டுவார பயிலரங்கில், அர்மேனியா, காங்கோ, எகிப்து, ஐவரி கோஸ்ட், கென்யா, கிர்கிஸ்தான் குடியரசு, லைபீரியா, மலேசியா, மொராக்கோ, நேபால், சியாரா லியோன், இலங்கை, தான்சானியா, உருகுவே மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து மகளிர் ராணுவப் படை வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் 12 இந்திய பெண் அதிகாரிகளும் ஐந்து பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159749
***
AD/SV/KPG/KR/DL
(Release ID: 2159900)