பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வு பெற்றவர்களுக்கு "தேசிய அனுபவ விருதுகளை" வழங்கினார், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
19 AUG 2025 3:10PM by PIB Chennai
விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 8வது "தேசிய அனுபவ விருதுகள்" வழங்கும் விழா மற்றும் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கின் 57வது பதிப்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளுக்கான மத்திய இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறைகளுக்கான இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் ஞானத்தையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர்களை "ஓய்வு காலத்திற்கு பிறகும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்காளிகள்" என்று அழைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனுபவ விருதுகள், ஓய்வுபெறும் அதிகாரிகளை கௌரவிப்பதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் பதிவு செய்யப்பட்ட அனுபவங்கள் மூலம் நிர்வாகத்தின் நிறுவனம் சார்ந்த நினைவை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஓய்வுபெற்றவர்களிடமிருந்து வரும் வெளிப்படையான கருத்துக்கள் வெளிப்படைத்தன்மை, குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன என்று அவர் தெரிவித்தார். "ஓய்வுக்குப் பிறகு குறைவான பங்குகளைக் கொண்டவர்களால், மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேச முடியும். அவர்களின் அவதானிப்புகள், நமது கொள்கைகளை சரியான திசையில் கொண்டு செல்லவும், சிறந்த சேவை வழங்கலை உறுதி செய்யவும் உதவுகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
நிறுவன கற்றலுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். அனுபவ் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் நினைவுக் குறிப்புகளை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு அதிகளவில் பயன்படுத்தப்படும் என்றும், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்ற முறையான இடைவெளிகளைக் கண்டறிய உதவும் என்றும் அவர் கூறினார். "மனித நுண்ணறிவும், செயற்கை நுண்ணறிவும் இணைந்து கொள்கை சீர்திருத்தங்களை வழிநடத்தும் வகையிலான ஒரு கலப்பின மாதிரியை நோக்கி முன்னேறுகிறோம்," என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு விருதுகள் இந்த முயற்சியின் ஒரு தசாப்தத்தைக் குறிக்கின்றன. இதுவரை அனுபவ் தளத்தில் 12,500 க்கும் மேற்பட்ட நினைவுக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 11 அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் பாராட்டப்பட்டனர். இதில் முதல் முறையாக ஒரு பொதுத்துறை வங்கி மற்றும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்குவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157882
***
(Release ID: 2157882)
AD/RB/DL
(Release ID: 2158199)
Visitor Counter : 5