வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
விருதுநகரில் பிரதமரின் மித்ரா பூங்கா உருவாக்குவது உட்பட 7 உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன
Posted On:
13 AUG 2025 1:10PM by PIB Chennai
தமிழ்நாட்டின் விருது நகரில் 1052 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள பிரதமரின் மித்ரா (ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்) பூங்கா அமைப்பது உட்பட ஏழு உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து வலையமைப்பு திட்டமிடல் குழுவின் 98-வது கூட்டம் மதிப்பீடு செய்துள்ளது. ரயில்வே, சாலைகள், சரக்குப் போக்குவரத்து, ஜவுளி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
விருதுநகரில் அமைக்கப்படவுள்ள ஜவுளிப் பூங்காவில் உற்பத்தி பிரிவுகள், பொதுவான, ஒருங்கிணைந்த கழிவு சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பயிற்சி மையங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதேபோன்ற பிரதமரின் மித்ரா பூங்கா மத்தியப்பிரதேசத்திலும் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த ஜவுளிப் பூங்காக்கள் உலகளாவிய போட்டியை விரிவாக்குவதுடன் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். பிரதமரின் விரைவு சக்தி, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுக்கு இணங்க உலகளாவிய ஜவுளித்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதோடு பிராந்திய வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறையின் பொருள் போக்குவரத்துப் பிரிவு இணைச் செயலாளர் திரு பங்கஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்திற்கு 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது பயணிகள் போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்தும் அதிகரிக்கும். அதேநேரத்தில் போக்குவரத்து செலவும் குறையும். சிமெண்ட், நிலக்கரி, இரும்பு, எஃகு உட்பட தொழில்துறைக்கு மிகவும் தேவையான பொருட்கள் போக்குவரத்திற்கும் உதவியாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155981
***
AD/SMB/AG/SG
(Release ID: 2156052)