சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

Posted On: 12 AUG 2025 3:11PM by PIB Chennai

சுகாதாரம் என்பது ஒரு மாநிலத் திட்டமாகும்.  இருப்பினும், தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவை மற்றும் முன்மொழிவின்படி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான  உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மனித வள மேம்பாடு, பரிசோதனை, ஆரம்பகால நோயறிதல், பரிந்துரை, சிகிச்சை மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ், 770 மாவட்ட தொற்றா நோய் மருத்துவமனைகள், 233 இருதய பராமரிப்பு அலகுகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 6,410 தொற்றா நோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாக, நாட்டில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதனை செய்வதற்கான மக்கள் தொகை அடிப்படையிலான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் முழுமையான பரிசோதனையை மேற்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் தொடர்பான விழிப்புணர்வை பிப்ரவரி 20, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை நடத்தியது. இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் ஆயுஷமான் ஆரோக்கிய மையங்கள் மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ் உள்ள பிற சுகாதார வசதிகளில் நடத்தப்பட்டது.

தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு நிலை சுகாதார வசதிகளில் மருந்துகள் மற்றும் வழக்கமான பின்தொடர்தல் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன:

 

உயர் இரத்த அழுத்தத்திற்கான அத்தியாவசிய மருந்துகள் ஆயுஷமான் ஆரோக்கிய மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் போன்ற அனைத்து நிலைகளிலும் கிடைக்கின்றன.

தொற்றா நோய்கள் வலைத்தளம் மூலம் மாதாந்திர பின்தொடர்தல்கள் எளிதாக்கப்படுகின்றன, திட்டமிடப்பட்ட வருகைகள் பதிவு செய்யப்பட்டு அதற்கேற்ப மருந்துகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு பரிந்துரை வழிமுறைகள் உள்ளன.

நமது நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுன் மாதம் முப்பதாம் தேதி வரையிலான கால கட்டத்தில் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,83,850 ஆக உள்ளது. இதே காலகட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,11,051 ஆக உள்ளது.

மாவட்ட தொற்றா நோய்களுக்கான மருத்துவமனைகளில் ஆலோசகர்கள் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கவனம் செலுத்தும் வாழ்க்கை முறை மற்றும் ஆபத்து காரணி ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர் செவிலியர்கள் சுகாதார வசதிகளில் நோயாளி வருகையின் போது வாழ்க்கை முறை ஆலோசனைகளை வழங்குகிறார்கள் மற்றும் சுகாதார தகவல்களை வழங்குகிறார்கள்.

அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர், சமூக அடிப்படையிலான மதிப்பீட்டு சரிபார்ப்புப் பட்டியல்  படிவங்களைப் பயன்படுத்தி முப்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் இடர் மதிப்பீட்டைச் மேற்கொள்கிறார். மேலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பொதுவான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக்காக அவர்களை ஆயுஷமான் ஆரோக்கிய மையங்களுக்கு அழைத்து வருகிறார். வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் இதர பரிசோதனைகள் மூலம் ஆரம்பகால கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். உணவுமுறை, உடல் செயல்பாடு, புகையிலைப் பழக்கம் மற்றும் மது அருந்துவதை நிறுத்துதல் மற்றும் வழக்கமான மருந்துகளைப் பின்பற்றுதல் குறித்து நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க சமூக சுகாதார அதிகாரிகள், துணை செவிலியர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2155451)

AD/SM/RJ


(Release ID: 2155712)
Read this release in: English , Urdu , Hindi , Telugu