சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது இந்திய உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்

மனிதகுலத்தின் உன்னதமான செயல்களில் ஒன்று உறுப்பு தானம் : திரு ஜேபி நட்டா

Posted On: 02 AUG 2025 5:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பன வழிமுறைகள நெறிப்படுத்தி, அனைவருக்கும் அவை கிடைக்கும் வகையில் செய்து வருகிறது எனவும் இதனால் மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஏற்பாடு செய்த 15-வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு நட்டா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பொறுப்பு செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா மற்றும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் , ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் " அங்தானம்- ஜீவன் சஞ்சீவனி இயக்கம் " என்ற தேசிய இயக்கத்தின் கீழ், 15-வது இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது . இந்த இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியத்தையும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை நீக்குவதையும், மக்கள் உறுப்பு தானத்திற்கு உறுதியளிக்க ஊக்குவிப்பதையும் வலியுறுத்துகிறது. உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், வாழ்க்கை என்ற பரிசை வழங்கிய தன்னலமற்ற நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கௌரவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நட்டா, இறப்பைக் கடந்து வாழ்க்கையின் இரக்கம், நம்பிக்கை மற்றும் வெற்றியைக் குறிப்பது உறுப்பு தானம் என கூறினார். உறுப்பு தானம் என்பது மனிதகுலத்தின் உன்னதமான செயல்களில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார். மருத்துவ அறிவியல் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள உலகில், உறுப்பு தானம் என்பது ஒருவர் மற்றொருவருக்குச் செய்யக்கூடிய மிக ஆழமான பங்களிப்புகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை சுட்டுக் காட்டிய திரு நட்டா, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் என்றார்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் கிடைக்கக்கூடிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது என்று அவர் கூறினார். இந்த இடைவெளி, விருப்பமின்மையால் அல்ல எனவும், மாறாக பெரும்பாலும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களினால் தயக்கத்தால் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால்தான் இன்று ஒரு முக்கியமான நாள் என அவர் கூறினார். இந்த நாள் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், உரையாடலை ஊக்குவிப்பதற்கும், நன்கொடையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிப்பதற்கும் ஒரு தளத்தை நமக்கு வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

உறுப்பு தானத்தில் இந்தியா மேற்கொண்ட முன்னேற்றங்களை எடுத்துரைத்த நட்டா, 2023-ம் ஆண்டில் ஆதார் அடிப்படையிலான இணையதள உறுதிமொழி தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, 3.30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர் என்றார். இது பொது பங்கேற்பில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது என அவர் கூறினார். உறுதிமொழிப் பதிவில் ஏற்பட்ட இந்த அதிகரிப்பு, இந்த பகிரப்பட்ட இலக்கை நோக்கி மக்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக, 2024-ம் ஆண்டில் 18,900 க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்து இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது எனவும், இது ஒரே ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச அளவு என்றும் கூறினார். 2013-ம் ஆண்டில் 5,000 க்கும் குறைவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளிலே நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

உறுப்பு தேவைக்கும், கிடைக்கக்கூடிய நன்கொடையாளர்களுக்கும் இடையிலான இடைவெளி குறித்து திரு நட்டா உரையாற்றினார். மேலும், அதிக விழிப்புணர்வு, அதிக பொது உரையாடல்கள், குடும்பங்களிடமிருந்து சரியான நேரத்தில் ஒப்புதல், வலுவான அமைப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு உறுப்பு தானம் செய்பவரும் ஒரு அமைதியான நாயகர் எனவும்தன்னலமற்ற செயல் துக்கத்தை நம்பிக்கையாகவும், இழப்பை வாழ்க்கையாகவும் மாற்றுகிறது எனவும் கூறினார். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், குடல்கள் ஆகியவற்றை தானம் செய்வதன் மூலம் ஒருவர் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். கூடுதலாக, திசு தானம் மூலம் எண்ணற்ற உயிர்களை மாற்ற முடியும்" என்று அவர் கூறினார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசின் முயற்சிகளை சுடிட்டுக் காட்டிய திரு நட்டா, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக, தேசிய ஆரோக்கிய நிதியின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு 15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது என அவர் கூறினார். மருத்துவ செலவுகளை ஈடுகட்ட ஏழை நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதத்திற்கு 10,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த யோகாவை அனைவரும் பின்பற்றுமாறு வலியுறுத்திய அவர், ஆயுர்வேதமும் யோகாவும் நமது உறுப்புகளை வலுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிய பயிற்சிகளை வழங்குகின்றன என்றார். ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த நாம் யோகாவை ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும் என்று திரு ஜேபி நட்டா கூறினார்.

திருமதி நிவேதிதா சுக்லா வர்மா பேசுகையில், உறுப்பு தானம் செய்பவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களிடையே உறுப்பு தானம் குறித்த உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சியில் உறுப்பு தான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.       

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. விஜய் நெஹ்ரா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், தானம் செய்த குடும்பத்தினர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் பிற முக்கிய தரப்பினர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2151756)

AD/PLM/RJ


(Release ID: 2151809)