ரெயில்வே அமைச்சகம்
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ரயில்வே துறையில் முன்னெப்போதும் இல்லாத கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது: மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
Posted On:
27 JUL 2025 5:47PM by PIB Chennai
கதி சக்தி விஸ்வவித்யாலயாவின் மூன்றாவது பட்டமளிப்பு விழா இன்று (27.07.2025) வதோதராவில் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், இந்தியாவின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்துத் துறைகள் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைக் கண்டு வருவதாகவும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருவதாகவும் கூறினார்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக சரக்குப் போக்குவரத்துத் துறை அமையும் எனவும் இது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இத்துறையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். போக்குவரத்து சேவைகள் வலுவாக இருந்தால், நமது எல்லைகள் வலுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புப் பொருட்களையோ அல்லது வீரர்களுக்கான உணவுப் பொருட்களையோ சரியான நேரத்தில் எல்லைக்கு வழங்கும்போது, எல்லைக் காவல்படையினரின் மன உறுதி வலுவடையும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ரயில்வே அமைச்சரும், கதி சக்தி விஸ்வவித்யாலயாவின் வேந்தருமான திரு அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றங்களை எடுத்துரைத்தார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரயில் கட்டமைப்பு 5,300 கிலோ மீட்டர் விரிவடைந்துள்ளதாகவும், சுரங்கப்பாதை கட்டுமானம் மொத்தம் 368 கிலோ மீட்டர் நீளத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிக்க வேண்டும் என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 194 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் பட்டங்களைப் பெற்றனர். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒரு மாணவருக்கு கல்விச் சிறப்புக்கான விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் சிறந்த மாணவர் விருதுகளும் வழங்கப்பட்டன.
கதி சக்தி விஸ்வவித்யாலயா துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் சவுத்ரி வரவேற்புரையாற்றுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் செயல்திறன் குறித்த தகவல்களை வழங்கினார். கதி சக்தி விஸ்வவித்யாலயா என்பது, போக்குவரத்து தொடர்பான கல்வி, இத்துறையில் பன்முக ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தியாவின் முதல் போக்குவரத்துக் கட்டமைப்பு தொடர்பான பல்கலைக்கழகமாகும்.
*****
(Release ID: 2149090)
AD/PLM/RJ
(Release ID: 2149136)