வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கரிம பருத்தி சான்றிதழ் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகள் - அபேடா மறுப்பு
Posted On:
27 JUL 2025 10:58AM by PIB Chennai
தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டம் (NPOP - என்பிஓபி திட்டம்), மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வணிகத் துறையால் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்காக 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) செயல்படுகிறது. சிறு, குறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சான்றிதழ் முறை அவசியம் என்று கருதப்பட்டதால், விவசாயிகள் குழுச் சான்றிதழ் முறை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கரிமப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மூன்றாம் தரப்பு சான்றிதழ் கட்டாயத் தேவையாகும். பயிர் உற்பத்திக்கான என்பிஓபி திட்டத்தின் தரநிலைகள் ஐரோப்பிய ஆணையம் மற்றும் சுவிட்சர்லாந்தின் தரநிலைகளுக்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனாலும் இந்த தர நிலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
என்பிஓபி திட்டத்தின் கீழ் ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பால் (அரசு அல்லது தனியார்) கரிம பொருட்களுக்குச் சான்றளிக்கப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்புகள், அவர்களின் அளவீடுகளின்படி சான்றளிக்கின்றன. தற்போது, இந்தியாவில் 37 அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றில் 14 மாநில சான்றிதழ் அமைப்புகள் அடங்கும்.
இதில், என்பிஓபி-யின் கீழ் இயற்கை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அபேடா அல்லது வர்த்தகத் துறை எந்த மானியத்தையும் வழங்குவதில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. கரிமச் சான்றிதழ் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ளது. சமீபத்திய பதிவுகளின்படி கீழ் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் அமைப்புகளால் சான்றளிக்கப்பட்ட சுமார் 19,29,243 விவசாயிகளை உள்ளடக்கிய 4712 கரிமச் சாகுபடியாளர் குழுக்கள் உள்ளன. இந்த விவசாயிகள் குழுக்கள் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தேயிலை, காபி, மசாலாப் பொருட்கள், பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
சரிபார்ப்பு நடைமுறைகள் உள்ள போதிலும், விவசாயி குழு சான்றிதழில் முறைகேடுகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த வகையான இணக்கமின்மைகள் தொடர்பாக அதிகாரிகளால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
* என்பிஓபி தரநிலைகளுடன் இணக்கமின்மை, விதி மீறல் புகார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கண்காணிப்பு, மொபைல் செயலி மூலம் விவசாயிகள் குழுக்களை ஆய்வு செய்தல் ஆகியவை தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன.
* கரிம பருத்தி உற்பத்தியின் சான்றிதழுக்கான கூடுதல் சோதனைகளுக்கு புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
* கடமை தவறிய சான்றிதழ் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* என்பிஓபி-யின் கீழ் உள்ள கரிம சான்றிதழ் அமைப்பு நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தெளிவாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு அபேடா உறுதிபூண்டுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பின்போது, தேசிய கரிம உற்பத்தித் திட்டமான கரிமச் சான்றிதழ் திட்டத்திற்கு (NPOP) எதிராக ஆதாரமற்ற, தவறான கருத்துகளைக் கூறியிருந்தார். நாட்டின் வலுவான ஒழுங்குமுறை அமைப்புக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது, சட்டபூர்வமான ஒழுங்குமுறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும், நாட்டின் இயற்கை வேளாண் (கரிம) இயக்கத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.
*******
(Release ID: 2148991)
AD/PLM/RJ
(Release ID: 2149057)