ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு & காஷ்மீர் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டிகள் விரைவாக மேம்படுத்தப்படுவதைக் காண்கின்றன

குறைபாடுகளைக் கண்டறிதல், தண்டவாள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்திய ரயில்வே செய்ற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார்

பள்ளத்தாக்கில் இயக்கப்படும் டீசல் மற்றும் மின்சார ரயில் பெட்டிகள், பழுதுபார்ப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த லக்னோ பணிமனைக்கு குறிப்பிட்ட கால அட்டவணை முறையில் கொண்டு வரப்படுகின்றன

Posted On: 27 JUL 2025 9:25AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, செனாப் மற்றும் அஞ்சி பாலங்களுடன் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தை ஜூன் 06, 2025 அன்று தொடங்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்முவுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் இது ஒரு வரலாற்று மைல்கல்.

கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பாதையில் ஒரு முக்கியமான போக்குவரத்து அம்சமாக மாறியுள்ளது.

தண்டவாள பராமரிப்பு: புதிய ரயில் சேவைகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக, இந்தப் பாதை திறக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் பாதைகளைப் பராமரிக்கும் திறனில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில் இணைப்பு, தண்டவாள பராமரிப்பு இயந்திரங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நகர்த்த உதவியுள்ளது. முன்பு ரயில்வே ஊழியர்களால்  பராமரிக்கப்பட்டு வந்தது போலல்லாமல், இப்போது பராமரிப்பு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது தண்டவாளத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.

தண்டவாள இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தல்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, இயந்திரங்களின் பயன்பாடு பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளது:

ஜூன், 2025 தொடக்கத்தில் இருந்து ஒரு அழுத்தமுறை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. தண்டவாளங்களின் சரியான சீரமைப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த இயந்திரம் தண்டவாளங்களுக்கு அடியில் உள்ள கல் சில்லுகளை இறுகச் செய்கிறது. இது இதுவரை பள்ளத்தாக்கில் சுமார் 88 கி.மீ. பாதையை சீர் செய்துள்ளது. இது தண்டவாள அடிப்பரப்பை மேம்படுத்தியுள்ளது. இதனால் பயணம் மிகவும் சீராக இருக்கும்.

இரண்டு தண்டவாள அடிப்பரப்பை சீர் செய்யும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தண்டவாளங்களில் உள்ள கல் சில்லுகளை சேகரிக்கும் அமைப்பு ஆகும். இது ரயில் பாதைகளுக்கு தேவையான சமச்சீரை வழங்குகிறது.

ஜூலை 2025-ல் பள்ளத்தாக்குக்கு இரண்டு கூடுதல் இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. இந்த இயந்திரங்கள் ஆழமான பரிசோதனைகளை மேற்கொண்டு சுமார் 2.5 கிமீ பாதையை சீர்படுத்தியுள்ளன.

இந்த பணிகளைச் செய்ய, கதுவா, காசிகுண்ட், மாதோபூர் மற்றும் ஜிந்த் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகளிலிருந்து இந்த வகை இயந்திரங்கள் 17 அனுப்பப்பட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு பாதைகளில் இறக்கப்பட்டன. இதன் விளைவாக, 19,000 கன மீட்டர் தண்டவாள அடிப்பரப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 2025 மற்றும் ஜூலை 2025 இல் முறையே  தண்டவாள நிலை அறியும் வாகனம் (TRC) மற்றும் வேக கண்காணிப்பு அமைப்பு (OMS) ஓட்டங்களும் நடத்தப்பட்டன. பாதையின் தரம் மதிப்பிடப்பட்டு கவனம் தேவைப்படும் பாதையின் தூரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தண்டவாள மேம்பாடு: நாடு முழுவதும் தண்டவாளங்கள் மேம்படுத்தப்படுகின்றன. சிறந்த தண்டவாளங்கள் பாதுகாப்பையும் பயணத் தரத்தையும் மேம்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் 78% தண்டவாளங்கள் மணிக்கு 110 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2014 இல் வெறும் 39% மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் மொத்த தண்டவாள நீளம் அதிகரித்ததை கருத்தில் கொண்டு இந்த அதிக விகிதத்தைக் காண வேண்டும். 2014 இல் 79,342 கிமீ ஆக இருந்த தண்டவாளங்களின் மொத்த நீளம் 2025 இல் 1 லட்சம் கிமீ ஆக அதிகரித்துள்ளது.

தண்டவாள பராமரிப்பு ஊழியர்களுக்கான பணி நிலைமைகளை மேம்படுத்துதல்: மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “தண்டவாள தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை கணிசமாக மேம்படுத்துவதன் மூலம் பாதையின் தரத்தை மேம்படுத்துவோம். நவீன தண்டவாள பொருத்துதல்கள், தண்டவாள இயந்திரங்களின் பயன்பாடு, நுண்ணொலி முறிவு கண்டறிதல் இயந்திரங்கள், சாலை மற்றும் ரயில் வாகனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தண்டவாள அளவீட்டு இயந்திரங்கள் நமது தண்டவாள பராமரிப்பை அறிவியல் பூர்வமானதாக மாற்றும். குறைபாடுகளைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு விரிவாகப் பயன்படுத்தப்படும். இந்த தொழில்நுட்ப மாற்றங்கள் தண்டவாள பராமரிப்பு ஊழியர்களுக்கான பணி நிலைமைகளை கணிசமாக மேம்படுத்தும்.”

ஜம்மு காஷ்மீரில் பயணிகள் ரயில் பெட்டிகள் மேம்படுத்தலின் புதிய சகாப்தம்

தட மேம்பாட்டுடன், ஜம்மு காஷ்மீரில் பயணிகள் ரயில் பெட்டிகளின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலில் ஒரு முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் இணைப்பு திறக்கப்படும் வரை, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்ற இந்திய ரயில்வே வலைப் பின்னலுடன் ரயில் இணைப்பு இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள டீசல் / மின்சார ரயில் பெட்டிகளை அவ்வப்போது பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக பணிமனைக்கு கொண்டு வர முடியவில்லை.

 

புட்காமில் இருந்து லக்னோவிற்கு சாலை டிரெய்லர்களில் பெட்டிகளை கொண்டு செல்வதன் மூலம் அவ்வப்போது பழுதுபார்க்கப்பட்டது. இது உகந்ததாக இல்லை. முதல் முறையாக, பள்ளத்தாக்கிலிருந்து பெட்டிகள் ரயில் பாதை வழியாக லக்னோவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

புட்காமில் உள்ள அனைத்து பெட்டிகளின் நிலையும் காலவரையறையிலான முறையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பின்வரும் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்கு உட்பட்டுள்ளன:

ஒரு மின்சார ரயிலின் பெட்டிகள் பராமரிப்பு நிறைவடைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இப்போது பள்ளத்தாக்கில் செயல்படுகின்றன. மற்றொரு மின்சார ரயிலின் பெட்டிகள் பராமரிப்பு ஜூலை 2025 இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டீசல் ரயிலின் பெட்டிகள் பராமரிப்பு சர்பாக் பணிமனையில் நிறைவடைந்துள்ளது. மற்றொரு டீசல் ரயிலின் பெட்டிகள் சார்பாக் பணிமனையில் பராமரிப்பில் உள்ளது. இது ஆகஸ்ட், 2025 நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜலந்தர் பணிமனையில் மேலும் ஒரு டீசல் ரயிலின் பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது ஜூலை, 2025 இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்பாக் மற்றும் ஜலந்தர் பணிமனையில் மேலும் நான்கு டீசல் ரயிலின் பெட்டிகள் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பயணிகள் ரயில் பெட்டிகளின் மேம்படுத்தல் பணிகள் ஆகஸ்ட் 31, 2025 க்குள் நிறைவடையும். சேவையில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் இந்தக் காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

இந்திய ரயில்வே பெரும்பாலும் 'நாட்டின் உயிர்நாடி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் பாதை திறக்கப்பட்டு, தற்போதைய மேம்படுத்தல் பணிகள் மூலம், இது ஜம்மு காஷ்மீருக்கு ஒரு புதிய உயிர்நாடியை வழங்கும்.

***

(Release ID: 2148972)

AD/SM/RJ


(Release ID: 2149030)
Read this release in: English , Urdu , Hindi