சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் 10.18 கோடி பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர்

Posted On: 26 JUL 2025 10:17AM by PIB Chennai

நாடு முழுவதும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10.18 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டதன் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பெண்கள் ஆரோக்கியத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான மக்கள் தொகை அடிப்படையிலான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த முயற்சி 30 முதல் 65 வயதுடைய பெண்களை இலக்காகக் கொண்டுள்ளது, முதன்மையாக பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களால் துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காட்சி பரிசோதனையைப் பயன்படுத்தி நோய் கண்டறிதல் மேற்கொள்ளப்படுகிறது. புற்றுநோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் நிலையில் நோயறிதல் மதிப்பீட்டிற்காக உயர் மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

அடிப்படை அளவில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) சமூக அடிப்படையிலான மதிப்பீட்டு சரிபார்ப்புப் பட்டியல் படிவங்களைப் பயன்படுத்தி ஆபத்தில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் நோய் கண்டறிதலில் அவர்கள் பங்கேற்பதை எளிதாக்குவதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ASHAக்கள் உதவுகின்றன.

சமூக மட்டத்தில் நல்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தகவல் தொடர்பு பிரச்சாரங்களை மேம்படுத்துதல் புற்றுநோய் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் மற்றும் உலக புற்றுநோய் தினம் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அனுசரிக்கப்படுகின்றன. கூடுதலாக, அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடக தளங்களின் பயன்பாடு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வை தொடர்ச்சியாக பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவற்றின் திட்ட செயல்படுத்தல் முறைகளின்படி (PIPs) விழிப்புணர்வு உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிதி வழங்கப்படுகிறது.

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான நோய் கண்டறிதல் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக, அமைச்சகம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 31, 2025 வரை காலக்கெடு கொண்ட பிரச்சாரத்தையும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் வெற்றி தற்போதைய சாதனைக்கு பங்களித்துள்ளது.

ஜூலை 20, 2025 நிலவரப்படி, தேசிய தொற்றா நோய்களுக்கான இணையதளத்தின் தரவுகள், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 25.42 கோடி பெண்களில் 10.18 கோடி பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது - இது ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் விரிவான மற்றும் தடுப்பு சுகாதார சேவையை வழங்குவதற்கான அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வெள்ளிக்கிழமை (25/07/2025) மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.

****

(Release ID: 2148754)
AD/SM/SG

 


(Release ID: 2148908)