ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறி குடிசைத் தொழில்துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
25 JUL 2025 1:56PM by PIB Chennai
நாடு முழுவதும் 31.45 லட்சம் வீடுகளில்/ இல்லங்களில் கைத்தறி அலகுகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019-20-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பின்படி நாடு முழுவதிலும் 35.22 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதுசார்ந்த பணியாளர்கள் உள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
கைத்தறித்துறை அமைப்பு சாரா தொழிலாக உள்ளதால் நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை அரசு வழங்குவதில்லை. கைத்தறி நெசவாளர்கள் திறனுடன் கூடிய, பாரம்பரிய தொழிலை செய்து வருவதன் மூலமாக சுய வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். எனினும் நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் நலன்களுக்காகவும், கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய ஜவுளி அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் தகுதி உடைய கைத்தறி முகமைகள் / நெசவாளர்களுக்கு மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்காகவும், கைத்தறி உபகரணங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காகவும் சூரிய மின் உற்பத்திக்கான அலகுகள், கைத்தறி எந்திரங்களை நிறுவுவதற்கான கட்டுமானம், திறன் மேம்பாடு, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் பொது உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் சலுகையுடன் கூடிய கடனுதவிகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உள்ளூர் நெசவாளர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய ஜவுளி அமைச்சகத்தால் செயல்பட்டு வரும் இத்திட்டங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் முறையே 1516 கோடி ரூபாய் மற்றும் 1480.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
AD/SV/AG/KR
(Release ID: 2148374)