உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரைவாக நீதி கிடைப்பதற்கான புதிய குற்றவியல் சட்டம்

Posted On: 23 JUL 2025 1:41PM by PIB Chennai

நீதித்துறை செயல்பாட்டை விரைவுபடுத்துவதற்காக புதிய குற்றவியல் சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள விதிகளின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன:

1.    விரைவாகவும் நியாயமாகவும் வழக்குகளை தீர்த்து வைத்தல்: சட்ட அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் விரைவாகவும் நியாயமாகவும் வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என்று புதிய சட்டங்கள் உறுதி அளிக்கின்றன. புலனாய்வு மற்றும் தொடக்கநிலை விசாரணைகள் 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் கூடுதல் விசாரணை (90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்), பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ஆவணங்களை வழங்குதல் (14 நாட்களுக்குள்), வழக்கை விசாரணைக்கு கொண்டு செல்லுதல் (90 நாட்களுக்குள்) குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல் (60 நாட்களுக்குள்) தீர்ப்பு வழங்குதல் (45 நாட்களுக்குள்) என காலவரையறை வகுக்கப்பட்டு உள்ளது.

2.    பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களின் விசாரணைக்கு புதிய சட்டங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

3.    தேவையற்ற தாமதத்தை தவிர்ப்பதற்காக அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளுக்கு மட்டுமே அனுமதி.

4.    நீதித்துறை செயல்முறையின் வேகம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில் இ-சாக்ஷியா, இ-சம்மன் மற்றும் நியாய- சுருதி செயலிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டவரின் கண்ணியத்தை காக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன:

1.    பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டவரின் அறிக்கையை காவல்துறை ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்.

2.    பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை ஒரு பெண் நீதிபதி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இயலாத சூழலில் ஒரு பெண்ணின் முன்னிலையில் ஆண் நீதிபதி பதிவு செய்யலாம்.

3.    பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் மருத்துவ அறிக்கையை புலனாய்வு அதிகாரிக்கு 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

4.    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

5.    மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு பாரதிய நியாய சட்டம் 2023-ல் மரண தண்டனைக்கு வழிவகுக்கப்பட்டு உள்ளது. மைனர் பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்து உள்ளார்.

***

(Release ID: 2147184)

VL/TS/DL


(Release ID: 2147503)